Thursday, April 24, 2008

லக்கிலுக்கின் அதிரடி அறிமுகம் - சலனப் படம்

காமிக்ஸ் கௌபாய்களில் இரவுக்கழுகாரை விட எனக்கு அதிகமாகப் பிடிப்பது நம்ம லக்கிலுக்கைத்தான். லக்கிலுக்கின் கதைகளில் வரும் சித்திரங்களை, ஒவ்வொரு கதாபாத்திரங்களை இரசிப்பதிலேயே அதிக நேரம் செலவிட்டிருக்கிறேன். யூடியூப்பில் உலவிக்கொண்டிருந்தபோது எதேச்சையாக லக்கிலுக்கின் அறிமுகம் என்ற இந்த சலனப் படத்தைப் பார்த்து மகிழ்ந்து யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும் என இதோ உங்களுக்காக...



இந்தச் சலனப் படத்தில் லக்கிலுக்கின் நிழலைவிட வேகமானவர் என்பதைக் காணமுடியும். அடிதடி ஜேன், டால்டன் சகோதரர்கள் மற்றும் டின்டின் நாய் என்பவற்றையும் காணலாம். எந்தக்க கதையில் வந்தாலும் சூதாட்டத்தில் ஏமாற்றும் அந்தக் கறுப்புக் கோட்டுப் பயலின் பெயரை மறந்துவிட்டேன். "ஒரு கோச் வண்டியின் கதை"யிலும் அந்தச் சூதாட்ட மேதை வருவார். அந்தப் பயலின் பெயரை தெரிந்தால் யாராவது பின்னூட்டத்தில் போட்டுவிடுங்கள்.

Thursday, April 17, 2008

லக்கிலுக் - சில குறிப்புகள்!


* பெல்ஜியத்தில் வாழ்ந்த ஓவியரான மோரிஸ் என்பவரின் சிந்தனையில் உதித்த கார்ட்டூன் கவுபாய் பாத்திரம் தான் லக்கிலுக். 1946ல் அவர் முதன்முதலாக லக்கிலுக்கை வரையத் தொடங்கினார். 2001ல் அவர் மறையும் வரை கசாப்புகடைக்காரன் ஆடுகளை போட்டுத் தள்ளுவதை போல தொடர்ந்து வரைந்து தள்ளிக் கொண்டே இருந்தார். மொத்தமாக எழுபத்தி இரண்டு லக்கிலுக் காமிக்ஸ்கள் உருவாக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.


* 1850களுக்கு பிறகு அமெரிக்காவில் வாழ்ந்த மாவீரனாக லக்கிலுக் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கும். லக்கிலுக் தன் நிழலை விட வேகமாக இயங்கக் கூடியவர். அவர் துப்பாக்கியை இயக்கி முடித்த பின்னர் தான் அவரது நிழல் துப்பாக்கி உறையிலேயே கையை வைக்கும்.

* நீதிக்கும், நேர்மை பரிபாலனத்துக்கும் தன் உயிரைக்கூட பணயம் வைப்பார் லக்கி.

* மொள்ளமாறிகள், முடிச்சவிக்கிகள், கேப்மாரிகள் மற்றும் சொறிநாய்களுக்கு என்றுமே லக்கி சிம்மசொப்பனம் தான்.

* லக்கியின் ஒவ்வொரு கதை இறுதியில் “தனிமையே என் துணைவன், தனிமையே என் வாழ்க்கை” என்று பாடியவாறே செல்வார்.


* லக்கி ஆரம்பக்கட்டத்தில் செயின் ஸ்மோக்கராக இருந்தார். எப்போதும் புகைவழியும் வாய் அவருடையது. 1983க்கு பின்னர் அவர் தம் அடிப்பதை நிறுத்தினார். தம்முக்கு பதிலாக ஏதோ ஒரு குச்சியை வாயில் சும்மானாச்சுக்கும் வைத்திருப்பார். லக்கிலுக் கதைகளில் சிகரெட் தடை செய்யப்பட்டதற்காக உலக சுகாதார நிறுவனம் அதன் படைப்பாளிகளை கவுரவித்தது.

* லக்கிலுக் கதைகள் அனைத்துமே இரட்டை கதாநாயகர்களை கொண்டது. ஒரு கதாநாயகன் லக்கிலுக், இன்னொரு கதாநாயகன் ஜாலி ஜம்பர். லக்கிலுக்கின் குதிரை. லக்கியை விட அவரது குதிரை புத்திசாலி.

* ரின் டின் என்ற ஒரு லூசுநாய் லக்கிலுக்கின் அனேக கதைகளில் வந்து அவரை வெறுப்பேற்றும்.

* அமெரிக்க வரலாற்றில் நிஜமாகவே வாழ்ந்த பல கதாபாத்திரங்கள் லக்கிலுக்கின் கதைகளில் இடம்பெறும். அடிதடி ஜேன், பொடியன் பில்லி, ஜட்ஜ் ராய் பீன், முடிச்சவிக்கி ஜெஸ்ஸி ஜேம்ஸ், மொள்ளமாறி கூட்டமான டால்டன் சகோதரர்கள் ஆகியோரை லக்கிலுக் கதைகளில் காணலாம்.

டால்டன் சகோதர்கள்

பொடியன் பில்லி

அடிதடி ஜேன்

ஜட்ஜ் ராய்பீன்

ஜெஸ்ஸி ஜேம்ஸ்

* குறிப்பாக டால்டன் சகோதரர்கள் லக்கிலுக்குக்கு நன்றாக தண்ணி காட்டுவார்கள். அந்த டால்டன் சகோதர்களுக்கே லூசு நாய் ரின் டின் அட்டகாசமாக தண்ணி காட்டும்.

* அந்த காலத்தில் அமெரிக்காவில் புகழ்பெற்ற கோச்சு வண்டி கம்பெனியான வெல்ஸ் பார்கோ, உலகின் முதல் கூரியர் சர்வீஸ் நிறுவனமான போனி எக்ஸ்பிரஸ் போன்ற நிறுவனங்களை லக்கிலுக்கின் சாகசங்களில் காணமுடியும்.

* மற்ற கவுபாய் கதைகளை ஒப்பிடும்போது லக்கிலுக் கதைகளில் செவ்விந்தியர்கள் வருவது மிகக்குறைவே.

* லக்கிலுக் கதைகள் நான்கு திரைப்படங்களாக இதுவரை வந்திருக்கிறது. டிவி தொடராகவும், வீடியோ விளையாட்டுகளாகவும் கூட லக்கிலுக் தரிசனம் தந்திருக்கிறார்.

* லக்கிலுக் கதைகளை வாசித்தால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் அமெரிக்கா குறித்த வரலாற்று அறிவைப் பெறமுடியும். அன்றைய அமெரிக்காவில் நடந்த பல சம்பவங்கள் லக்கிலுக் கதைகளில் காட்சியாக விரியும்.

* சில லக்கிலுக் கதைகளின் அட்டைப்படங்கள் :
















Wednesday, April 16, 2008

காமிக்ஸ்.. சில பழைய நினைவுகள்..!

நான் பொடியனாக இருந்த காலத்தில் செமக் குறும்புக்காரனாம். வீட்டில் அடங்கவே மாட்டேனாம். ஒரு கட்டத்தில் என்னை கட்டில் காலோடு சேர்த்துக் கட்டியெல்லாம் கூட வைத்திருந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் எதுவும் வேலையாகமல் போய் விட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் 'இவன் வீட்டோடு அடங்காத அடங்காப்பிடாரனாக ஆகிவிடுவானோ' என்று பயம் ஏற்பட்டிருக்க வேண்டும். என்னை ஒரு இடத்தில் கட்டி வைக்க என்ன செய்யலாம் என்று யோசித்த அப்பாவிற்கு அவரது நன்பர் கொடுத்த யோசனை தான் சித்திரக்கதைகளும் சிறுவர் இலக்கியமும். அது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்; ஒரு நாள் அப்பா வீட்டுக்கு வேலை முடிந்து திரும்பி வரும்போது ஒரு புத்தகம் வாங்கி வந்தார். தலைப்பு "பாலமித்ரா" என்று இருந்தது.


அன்று தொடங்கிய பந்தம் தான் அது. இதோ இப்போது இரத்தப்படலத்திற்கு முன்பதிவு செய்து கொரியர் அனுப்பி விட்டு மூன்றாவது முறையாக லயன் அலுவலகத்திற்கு போன் செய்து "கொரியர் வந்திச்சா சார்" என்று கேட்டு விட்டு - "என்ன எழவுடா கொரியர் சர்வீஸ் நடத்தறான்" என்று புலம்பிக்கொண்டிருக்கிறேன் :-)

பாலமித்ரா தான் நான் முதல் முதலாக வாசித்த சிறுவர் இலக்கியம். சிறுவர் இலக்கியம் என்கிற வார்த்தையே தவறோ என்று இப்போது படுகிறது - ஏனெனில் அதில் அன்று வந்த பல கருத்துகள் இப்போது வளர்ந்த குழந்தைகளுக்கும் கூட பொருந்தி வரக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது. பழைய பாலமித்ராவை இப்போது எடுத்து வாசித்தாலும் அந்த நடை அப்படியே கட்டிப்போடுவதாக இருக்கும். என்ன ஒன்று - கொஞ்சம் ஧மல்மருவத்தூர் மகிமை, சாய்பாபா மகிமை என்றெல்லாம் கடைசியாக வரும் சிறுகதையில் மொக்கை போட்டிருப்பார்கள். But its okay!! ;-)

புத்தகம் என்னை ஓரிடத்தில் அமர்த்தி வைப்பதை பார்த்த அப்பா, பின் அம்புலிமாமா இதழ்களும் வாங்கி வர ஆரம்பித்தார். புதிய இதழ்கள் தவிர பழைய புத்தகக் கடைக்குச் சென்று பழைய இதழ்களையும் அரை விலைக்கு வாங்கி வந்து கொடுப்பார். விக்ரமாதித்தன்-வேதாளம் கதைகளுக்கு அந்தக் காலத்தில் நான் வெறித்தனமான ரசிகன். புத்தகம் கைக்கு வந்ததும் வேறெந்தக் கதைகளையும் விட முதலில் தேடிப்பிடித்து வாசிப்பது விக்ரமாதித்தன் கதையைத் தான்.

இப்படியாக வாசிப்புப் பழக்கம் ஒட்டிக் கொண்ட பின், அதே அலைவரிசையில் இருந்த வேறு சிலரும் நன்பர்களானார்கள். பூபதி, சேகர், குணா, நித்யா குணாவின் அண்ணா என்று நாங்கள் ஒரு செட். எங்களுக்குள் புத்தகங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்வோம். அப்படி நடந்த எக்ஸ்சேஞ்சில் ஒரு நாள் கையில் கிடைத்தது தான் ராணி காமிக்ஸ். பொதுவாக அது வரைக்கும் நானே புத்தகம் வாங்க கடைகளுக்குப் போனதில்லை. அப்படி ஒரு தேவை ஏற்பட்டதும் இல்லை. அப்பா தான் வாங்கி வருவார் - அதிலும் காமிக்ஸ்களுக்கு Strict NO!!. Only அம்புலிமாமா/பாலமித்ரா.. எப்போதாவது மாயாஜாலக் கதைகள். எனவே காமிக்ஸ் என்கிற ஒரு வடிவம் இவ்வளவு சுவாரசியமான ஒன்று என்பதே எனக்கு ரொம்ப நாட்களாகத் தெரியாமலேயே இருந்திருக்கிறது. அப்படி ஏன் காமிக்ஸ்களை என்னிடம் இருந்து அப்பா மறைத்து வைத்தார் என்பதை நான் முதல் காமிக்ஸ் வாசித்த போதே புரிந்து கொண்டேன்.

குணாவின் அண்ணா பிரகாஷ் அப்போது பத்தாவது முடித்து ரிசல்ட்டுக்காக காத்துக் கொண்டிருந்தார். எங்களுக்கு அது எட்டாவது பெரிய பரிட்சை லீவு சமயம். அவரிடம் நான் கொஞ்சிக் கூத்தாடி வாங்கியது ஜேம்ஸ் பாண்ட் கதை. பெயர் நினைவில் இல்லை - கதை கூட நினைவில் இல்லை. ஆனால் அந்த படங்கள் நன்றாக நினைவில் இருக்கிறது. குறிப்பாக அந்த அழகிய வில்லிகளும் கதாநாயகிகளும். பாண்டின் துப்பாக்கி சாகசங்கள் ஈர்த்ததோ இல்லையோ அந்த வயதில் அவரின் கட்டில் சாகசங்கள் நிறையவே ஈர்த்தது. இது போன்ற விடயங்களில் Exposure கிடைத்தவுடன்எல்லா பையன்கள் போல நானும் ரகசியமானவனாகிப் போனேன். பால் வித்தியாசம் தெரியாமல் எதிர்வீட்டு நித்தியாவுடன் நான் விளையாடிய விளையாட்டுகள் சுத்தமாகக் குறைந்து விட்டது. சில நாட்களிலேயே எனது குரல் உடைந்து போனது. மிலிட்டரி தாத்தா ஒரு குறும்புச் சிரிப்புடன் சொன்னார் - "ம்ம்ம்... பேராண்டி வயசுக்கு வந்துட்டான்..."

எனது விடலை நாட்களின் முக்கியத்தருணங்கள் பலவற்றுக்கும் காமிக்ஸ் ஏதோவொரு வகையில் காரணமாக இருந்திருக்கிறது. ஒருவேளை நான்கௌபாய்களை இமிடேட் செய்ய முயன்று, ஒரு மார்க்கமாக விளக்கெண்ணை குடித்தவன் போலவே இறுக்கமாக அலைந்து திரிந்ததால் தான் எனக்குப் பெண் அதிகம் நன்பர்கள் இல்லாமலேயே ( மெய்யாலுமேங்க) போய் விட்டார்களோ என்று இப்போதும் மனதில் ஓரத்தில் ஒரு சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. எனக்கு "குரல் உடைய" காரணமாக இருந்ததோடு ஜேம்ஸின் அந்த அழகிய காதலிகள் ஜகா வாங்கிக் கொண்டு விட்டார்கள்..மற்றபடி எனது விடலை நாட்களின் கனவுகளில் நான் இடுப்பின் இரண்டுபுறமும் சொருகிய கைத்துப்பாக்கியோடும், கெண்டைக்காலில் முள் உருண்டை கொண்ட ஷூவும், ஒரு புறம் சாய்ந்த வட்டத் தொப்பியுமாகவே அலைந்து திரிந்து கொண்டிருந்தேன்.

இதோ நாலு கழுதை வயசாகிவிட்டாலும், லயனின் அட்டைப் படத்தில் டெக்ஸைப் பார்த்ததும் வாய் தானாகவே "வாவ்" என்கிறது.. "இருளின் மைந்தர்கள்" இதழை ஒரு முப்பது முறையாவது படித்திருப்பேன்.. பல பக்கங்கள் அக்கக்காக உதிரும் நிலைக்கு வந்து விட்டது; செல்லோ டேப் போட்டு கிட்டத்தட்ட லேமினேட் செய்தே வைத்திருக்கிறேன். உரிமையோடு எனது பர்ஸில் இருந்து பணம் எடுக்கும் எனது அக்கா கூட தப்பித் தவறி எனது காமிக்ஸ் கலெக்ஷனை மட்டும் தொடவே மாட்டாள். என்னளவில் அவையெல்லாம் பொக்கிஷங்கள்; அவைகளெல்லாம் கால இயந்திரங்கள்.என்னை எனது பழைய உலகத்துக்கு கடத்திச் செல்லும் கால இயந்திரங்கள்.. ஒவ்வொரு புத்தகத்தைத் தொடும் போதும் ஒரு சம்பவம் நினைவுக்கு வரும் - "இது குணா கொடுத்தது" "இது நித்யா கிட்டேயிருந்து சுட்டது" "ஹேய்..அவளுக்கு இரண்டாவதா பையன் பிறந்திருக்கானில்லே" "இது இரும்புக் கை மாயாவி புத்தகத்தை தொலைத்ததற்கு ஈடாக சேகரிடம் வாங்கியது"......

சரி சரி போதும் போதும்...

பழைய நினைவுகளில் உலாத்துவது என்னளவில் ஒரு சுகானுபாவமாகத் தான் இருக்கிறது.. ஆனாலும் இந்த பதிவைப் பொருத்தமட்டில் மேற்கொண்டு உங்களை நான் போரடிக்க விரும்பவில்லை. லயன் கௌபாய் ஸ்பெசலுக்காகவும், ஜாலி ஸ்பெசலுக்காகவும் வெயிட் பண்ணிகிட்டிருக்கேன் ( ஏரியா தபால்காரர் நொந்துட்டார் ). வந்ததும் அதைப் பற்றி எழுதி உங்களை மீண்டும் போரடிப்பேன்.

அது வரை...

bye bye Friends!!!

Blog Widget by LinkWithin