Thursday, December 29, 2011

The reurn of இரும்புக்கை மாயாவி - லயன் கம்பேக் ஸ்பெஷல் (Jan 2012)

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.

 

இந்த வருடம் (2011) நம் அனைவருக்கும் மிகவும் சோதனையாக அமைந்தது கண்டு வருத்தம் அடைந்தாலும், அடுத்தது என்ன என்று எதிர்நோக்குகையில் குகையின் முடிவில் வெளிச்சம் மிகவும் பிரகாசமாக தெரிகிறது. ஆமாம், தோழர்களே. நம்முடைய அபிமான லயன் காமிக்ஸ் இந்த இன்டர்நெட் யுகத்தில் அடியெடுத்து வைக்கிறது. அதன் முதல் கட்டமாக இதோ எடிட்டர் விஜயன் சாரின் பிரத்யேக வலைப்பூ:

http://lion-muthucomics.blogspot.com/

மீள்வருகையின் முதல் கட்டமாக அற்புதமான ஆர்ட் பேப்பரில் உயர்தர அச்சில் முழுவண்ணகலவையில் ஒரு மீள்வருகை சிறப்பு இதழ் தயாராகி வருகிறது. நேற்று சிவகாசி சென்ற நான் மேலும் பல விவரங்களை சேகரித்து வந்துள்ளேன். அதன் விளைவே இந்த பதிவு.

  • புத்தகத்தின் விலை: ருபாய் நூறு மட்டுமே.
  • புத்தகத்தின் அளவு: சைஸ் (சமீபத்தில் வந்த விண்வெளி கொள்ளையர் அளவு)
  • புத்தக பக்கங்கள்: இருநூறு பக்கங்கள்.
  • புத்தகத்தின் அமைப்பு: நூறு பக்கங்கள் முழு வண்ணத்தில் + நூறு பக்கங்கள் கருப்பு வெள்ளையில்.
  • புத்தகத்தில் உள்ள கதைகள்: ஐந்து
  • புத்தகம் கிடைக்குமிடங்கள்: லயன் காமிக்ஸ் அலுவலகம்,சென்னை புத்தக கண்காட்சி
  • எப்போது முதல் கிடைக்கும்: ஜனவரி பத்தாம் தேதி முதல்
  • புத்தகத்தை வாங்குவது எப்படி: ருபாய் 130 ஐ முன்பதிவு லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் செய்து வாங்கலாம். சென்னை வாசகர்கள் சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கலாம்.

லயன் காமிக்ஸ் மற்றும் முத்து காமிக்ஸ் வாசகர்கள் ஒரு விஷயத்தை நன்றாக யோசிக்க வேண்டும். தமிழில் தரமான அச்சில், நல்ல தாளில், தெளிவான சித்திரங்களுடன், திறமையான மொழிபெயர்ப்புடன் காமிக்ஸ் படிக்க வேண்டுமெனில் உடனடியாக லயன் காமிக்ஸ் அலுவலக எண்ணிற்கு போன் செய்து (04562-272649) சந்தா விவரங்களை கேட்டறிந்து சந்தா கட்டவும், உங்கள் வீடு தேடி காமிக்ஸ் புத்தகங்கள் வந்து சேரும். இந்த புத்தகத்தில் உள்ள கதை விவரங்கள்:

1. லக்கி லுக் ஒற்றர்கள் ஓராயிரம்

2. கேப்டன் பிரின்ஸ் - பரலோகப்பாதை பச்சை

3. இரும்புக்கை மாயாவி முழுநீளக்கதை

4. எஜன்ட் காரிகன் - சாத்தானின் தூதன் டாக்டர் செவன்

5. இரும்புக்கை மாயாவி முழுநீளக்கதை

புத்தகத்தின் அட்டைப்படங்கள்:  (நன்றி விஜயன் சார்)

லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் சிறப்பு வெளியீடு முகப்பு அட்டை

லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் சிறப்பு வெளியீடு பின் அட்டை

Lion Comeback special front cover Lion Comeback special back cover

 

இந்த வருடம் ஒரு மாதம் விடுமுறையில் வந்து இருப்பதால் காமிக்ஸ் நண்பர்கள் அனைவரையும் சென்னை புத்தக கண்காட்சியில் சந்திக்க ஆவல். குறிப்பாக அய்யம்பாளையம் அவர்களை.

வழமை போல உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

நன்றி. வணக்கம்.

Tuesday, October 4, 2011

500

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள். என்ன இது? 300 படம் போல 500 என்று ஏதாவது காமிக்ஸ் வந்து இருக்கிறதா என்று நினைக்க வேண்டாம். தமிழில் காமிக்ஸ் படிக்க முடியாத சோகத்தில் இன்று சென்னை வந்து, இங்கு இருக்கும் புத்தக கடல்களில் மூழ்கி திளைத்தபோது காணப்பெற்ற ஒரு காமிக்ஸ் பற்றிய புத்தகத்தை பற்றிய பதிவே இது. புத்தகத்தை வாங்கி விட்டேன். கைவசம் ஸ்கான்னர் இல்லாத காரணத்தினால் வெறும் போட்டோக்களை மட்டுமே கொண்டுள்ளது இந்த பதிவு.

500 Great Comic Book Action Heroes Cover

டெக்ஸ் வில்லர்: நம்முடைய மனம் கவர்ந்த கவ்  பாய் ஹீரோ டெக்ஸ் வில்லர் இந்த புத்தகத்தில் இடம் பிடிக்க வில்லை என்றால் கண்டிப்பாக இந்த புத்தகத்தை நான் (கவுண்டமணி போல) அன்-செலக்ட் செய்து இருப்பேன். முதன்மையான ஐநூறு காமிக்ஸ் ஹீரோக்களில் டெக்ஸ் இல்லை என்றால் அந்த ஐநூறு ஹீரோக்களை செலக்ட் செய்தவருக்கு காமிக்ஸ் பற்றிய ஒரு முழுமையான புரிதல் இல்லை என்றே சொல்வேன். இதோ டெக்ஸ் வில்லரைப்பற்றிய இந்த புத்தக குறிப்புகள்:

500 Great Comic Book Action Heroes Tex Willer 1
500 Great Comic Book Action Heroes Tex Willer 2
500 Great Comic Book Action Heroes  Tex Willer 3
500 Great Comic Book Action Heroes Tex Willer 4

டேஞ்சர் டையபாலிக்: இந்த ஹீரோ தமிழில் ஒரே ஒரு கதையில் மட்டுமே வந்து இருந்தாலும் அவர் உலக அளவில் (குறைந்த பட்சம் இத்தாலி/பிரான்ஸ்) மிகவும் பிரபலம். இவரது ஒரே ஒரு கதை தமிழில் வந்து உள்ளது என்பதை அறிந்த இந்த காமிக்ஸ் ஹீரோவின் வெறியர்கள் அந்த புத்தகத்தை வாங்க துடியாய் துடித்தனர். எங்கள் ஊரை (மதுரை) சேர்ந்த ஒரு காமிக்ஸ் விற்பனனர் (இவருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாட்ஷா படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை) இந்த விடயத்தை கேள்விப்பட்டு மற்ற புத்தக ரசிகர்களிடம் இருந்து இந்த டேஞ்சர் டையபாலிக் புத்தகத்தை மட்டும் நைசாக பேசி (புத்தக மாற்று எக்ஸ்சேஞ் மூலம்) பல பிரதிகளை சேகரித்து அவற்றை ஐம்பதாயிரம் ருபாய் வரை விற்றதாக தகவல். இது தவறாகவும் இருக்கலாம், ஏனென்றால் இந்த மதுரை விற்பன்னரின் வளர்ச்சி பிடிக்காத தமிழ் கடவுள் பெயர் கொண்ட மற்றொரு புத்தக விற்பன்னர் (இவர் இந்த பீல்டில் fruit தின்று seed போட்டவர்) என்னிடம் கூறிய தகவல் இது.

தமிழில் வந்த இந்த ஹீரோவை பற்றிய ஒரு சுவையான காமிக்ஸ் இல்லாத பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்: டேன்ஜர் டையபாலிக் - லயன் காமிக்ஸ் அறிமுகம் செய்து வைத்த அற்புத ஹீரோ

500 Great Comic Book Action Heroes Danger Diabolik 1
500 Great Comic Book Action Heroes Danger Diabolik

அடுத்த படியாக தமிழ் காமிக்ஸ் உலகின் பல ஹீரோக்களை பற்றி தகவல் அளித்துள்ளார் இந்த புத்தக ஆசிரியர். ஜேம்ஸ் பான்ட், மாடஸ்டி, கார்த், காரிகன், மாண்டிரிக் (அடங்கொய்யால, ராணி காமிக்ஸ் இதழில் அவர் பெயர் அப்படித்தான் வரும்) என்று பலரைப்பற்றிய தகவல் கொண்ட சிறந்ததொரு குறிப்பேடாக இந்த புத்தகம் அமைந்துள்ளது.

500 Great Comic Book Action Heroes James Bond, Mandrake
500 Great Comic Book Action Heroes Modesty Blaise, Phil Corrigan

இந்த பதிவை இடுவதற்கு எதுவாக டையபாலிக் பற்றிய தகவல் இருக்கும் பக்கத்த்தில் தன்னுடைய கட்டை விரலை கொடுத்து புகைப்படம் எடுக்க ஏதுவாக இருந்த தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் அணில் நண்பர் சுந்தர் அவர்களுக்கு நன்றி.

Monday, March 21, 2011

சென்னையில் லயன் காமிக்ஸ் கிடைக்கும் இடங்கள்

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள். நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பு நானும் தமிழ் காமிக்ஸ் பற்றி பதிவெழுதிக்கொண்டு இருந்தேன். ஆனால் பணிச்சுமையும், இட மாற்றமும் சேர்ந்து என்னை கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக பதிவிடாமல் தடுத்தது. இதோ, நம்முடைய லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் ஆசிரியர் போல நானும் புத்துணர்வு பெற்று திரும்பி விட்டேன். இனிமேல் அடிக்கடி பதிவுகளை இட முயல்கிறேன்.

இன்று காலையில் திரு முத்து விசிறி அவர்களின் பதிவினில் இந்த கமெண்ட்டை கண்டேன், மன வருத்தம் கொண்டேன், இந்த பதிவினை இடும் சபதம் பூண்டேன்  (அட, விஜய டி.ராஜேந்தர் அவர்களை நேரில் சந்தித்ததில் இருந்து நமக்கும் இப்படி எல்லாம் ப்புளோவில் எதுகை மோனையாக வருகிறதே?). இதோ அந்த கமென்ட்:  //சரியில்ல....... said...

பிரண்ட்ஸ்.... மே ஐ கம் இன்? வணக்கம் நண்பர்களே..... நான் காமிக்ஸ் ரசிகன் ஆன போதும், சென்னையிலேயே வசிக்கின்ற போதும்.., எனக்கு இன்னும் ரத்தப்படலம் கிடைத்திட்ட பாடில்லை..... என்னுடைய காமிக்ஸ் தாகத்தை மீண்டும் கெளப்பி விட்ட உங்க எல்லோருக்கும் கோடி நன்றிகள். வரும் வாரத்தில் கார் புக் செய்து சிவகாசி கிளம்பப்போகிறேன்....... சென்னை கடைகளில் மகா மட்டமான பத்தகங்கள் கிடைக்கின்றது... லயன் கிடைப்பதில்லையே என்ற வயித்தெரிச்சலை விஜயன் ஸாரிடம் சொல்லாம் என்று இருக்கிறேன்...( அவரை சந்திக்க முடிந்தால்...) பழைய புத்தகங்கள்...(கைவசம் உள்ள பிரதிகள்) அனைத்தையும் அள்ளிக்கொண்டு வரும் முடிவில் இர்க்கிறேன்.... மற்றும் எனது ப்ளாக்கில் காமிக்ஸ் பற்றிய ஒரு பதிவு இடப்போகிறேன்.... வேறு ஒரு நாட்டில் இருக்கும் ஒரு தமிழ் நண்பன் காமிக்ஸ் அனுபவத்தை தான் எழுதப்போகிறேன்... டைம் கெடைச்சா வாங்களேன்!!! நவ் பை பை!!!//

இப்படி பலரும் கேட்பதால் இனிமேல் லயன் காமிக்ஸ் கிடைக்கும் இடங்களை எல்லாம் புகைப்படம் எடுத்து அந்த விலாசங்களை இப்படி பதிவிட்டால் புதிய வாசகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்குமே என்ற எண்ணத்தில் உருவாகியது தான் இந்த பதிவு.

 

சென்ற வாரத்தின் கடைசி இரண்டு நாட்கள் சென்னையில் ஒரு அலுவலகவேலை காரணமாக வந்து இருந்தேன் (அதாவது கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது). சென்னையில் பிரபலமாக இருக்கும் தி.நகரில் சென்னை சில்க்ஸ் பின் பக்கத்தில் இருக்கும் ஹோட்டல் தாஜ் கெமர் இன் ஹோட்டலில் தான் தங்கி இருந்தேன். அருமையான ஹோட்டல். அதன் அருகிலேயே ஒரு சப்பாத்திக்கடை வேறு. சொல்லவே வேண்டாம், அங்குதான் இரவினில் உணவு.

இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பரொருவரை சந்திக்க மயிலாப்பூர் சென்று இருந்தேன். அப்போது அவர் ஐஸ்க்ரீம் சாப்பிடலாம் வாங்க என்று லஸ் கார்னர் அருகில் இருந்த சங்கீதா ஹோட்டலின் முகப்பில் இருந்த ஐஸ் கிரீம் பார்லருக்கு அழைத்து சென்று கோன் ஐஸ் வாங்கி கொடுத்தார். அற்புதமான சுவையுடன் இருந்த அந்த ஐஸை சுவைத்துக்கொண்டே நடக்கையில் அருகில் இருந்த கடையில் அந்த அதிசயத்தை கண்டேன்.

லஸ் கார்னர் நேரு செய்தித்தாள் விற்பனையகம் - புத்தம் புதிய லயன் காமிக்ஸ் வெள்ளையாய் ஒரு வேதாளம் விற்பனைக்கு 

Nehru News Mart, Mylapore, Luz Corner Lion Display

லஸ் கார்னர் நேரு செய்தித்தாள் விற்பனையகம் - புத்தம் புதிய காமிக்ஸ் கிளாசிக்ஸ் களிமண் மனிதர்கள்  - இரும்புக்கை மாயாவி சாகசம்

Nehru News Mart, Mylapore, Luz Corner CC Display

லஸ் கார்னர் - மயிலாப்பூர் - நேரு செய்தித்தாள் விற்பனையகம் - லஸ் கார்னர் சிக்னல் அருகில் - சங்கீதா ஹோட்டல் இருக்கும் வரிசையில்

Nehru News Mart, Mylapore, Luz Corner

 

இதைத்தவிர சென்னையில் இன்னும் சில இடங்களில் காமிக்ஸ் கிடைக்க கண்டேன். அவற்றை பற்றி விரைவினில் முழுவதுமாக புகைப்படங்களுடன் பதிவிடுகிறேன். அதுவரையில் சென்னையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் சில இடங்களை பற்றிய விவரங்கள் இதோ:

1. Mylapore Tank தெப்பக்குளம் பெட்ரோல் பேங்க் அருகில் (ஸ்ரீகுமரன் எதிரில்) இருக்கும் புத்தகக்கடை.

 

2. Mount Raod Anand Theatre Bus Stop Pavement News Paper Shop ஆனந்த் தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் இருக்கும் நடைபாதை கடை.

 

3. T.Nagar Bus Depot. Krishnaveni Theatre Entrance Book Shop தி.நகர் பஸ் டிப்போ எதிரில் கிரிஷ்ணவேணி தியட்டர் வாசலில் இருக்கும் புத்தகக்கடை இங்கேதான் இப்போது லத்திகா என்ற குடும்ப படம் ஓடுகிறது.

 

4. Mambalam Railway Station Book Stall தி.நகர் மாம்பலம் ரெயில் நிலைய புத்தகக்கடை.

 

5. Koyambedu Bus Depot Book Stall கோயம்பேடு பஸ் நிறுத்த புத்தகக்கடை.

 

Chennai Distributor: இவை தவிர கடந்த ஐந்து ஆண்டுகளில் வந்த புத்தகங்களை சிவகாசி செல்லாமல் சென்னையிலேயே வாங்க:

Mr V.P. ரத்தினம் (Phone Number: 044-2495 0495)

No 12, நைனான் தெரு,

அபிராமபுரம்,

சென்னை 600018.

சென்னையில் இருந்த இரண்டு நாட்களில் கடுமையான பணிச்சுமை. ஆகையால் சக பதிவர்களை சந்திக்க இயலவில்லை. அதுவுமில்லாமல் இந்த பயணம் கடைசி நேர மாறுதலுக்குட்பட்டதாக இருந்த காரணத்தினால் முன்கூட்டியே திட்டமிட இயலவில்லை. அடுத்த மாதம் குட் பிரைடே அன்று நண்பர் ஒருவருக்கு சென்னையில் ஒரு முக்கிய வேலை இருப்பதால் அவருடன் நானும் வரவுள்ளேன். அப்போது சந்திக்கலாம் தோழர்களே.

வழமை போல உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

நன்றி. வணக்கம்.

Blog Widget by LinkWithin