Tuesday, July 24, 2007

பட்டைய கிளப்புது லயன் காமிக்ஸ்

1984ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து (?) வெளிவந்து கொண்டிருக்கும் லயன் காமிக்ஸின் 200வது இதழ் இப்போது கடைகளில் கிடைக்கிறது. காமிக்ஸ் ரசிகர்கள் பெரும்பாலோனோர் விரும்பி படிக்கும் Cowboy கதைகளை Digest ஆக தொகுத்து செம கலக்கலாக வந்திருக்கிறது Cowboy Special. விலை நூறே ரூபாய் தான். எல்லாம் புத்தக கடைகளிலும் கிடைக்கிறது. இந்த இதழின் சிறப்பம்சங்களில் சில :


லக்கிலுக் சாகஸம் முழு வண்ணத்தில்

டெக்ஸ்வில்லரின் அதிரடி - மாறுபட்ட ஓவியங்களில்

சிஸ்கோ கிட், ஸ்டீவ் சாகஸங்கள்

கேப்டன் டைகரின் இளமைக்கால போராட்டம்

போனஸாக "தொபுக்கடீர்" என்று Cowboy ஸ்பெஷலில் குதித்திருக்கிறார் இரும்புக்கை மாயாவி

ஒரே ஏமாற்றம் : வுட்சிடி கோமாளி கும்பலின் கும்மாளம் மிஸ்ஸிங் :(

நமது நேரத்தை சாட்டிலைட் டிவிக்கள் தின்று கொண்டிருக்கும் மோசமான காலக்கட்டம் இது. வாசிக்கும் பழக்கத்தை உங்களுக்கு மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள அல்லது உங்கள் குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுக்க இந்த இதழை பயன்படுத்திக் கொள்ளுங்கள். காமிக்ஸ் வாசிப்பு எவ்வளவு சுகமானது என்பது அதை அனுபவித்தவர்களுக்கே தெரியும்.

காமிக்ஸ் ரசிகர்களுக்கு இரத்தப் படலம் என்ற தொடர்கதையை நன்கு நினைவிருக்கும். கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலமாக லயன் காமிக்ஸில் இடம்பெற்றுவரும் காமிக்ஸ் காவியம். கிட்டத்தட்ட 18 தொகுதிகளையும் சேர்த்து ஒரே காமிக்ஸாக அடுத்த ஆண்டு வெளியிட லயன் காமிக்ஸ் நிறுவனத்தார் திட்டமிட்டிருக்கிறார்கள். இதுகுறித்த அறிவிப்பும் 200வது இதழில் இருக்கிறது.

லயன் காமிக்ஸ் ஆசிரியரின் ஹாட்லைனை படிக்கும் போது மிகுந்த சிரமத்துக்கிடையே காமிக்ஸினை வெளிகொண்டு வருவதாகத் தெரிகிறது. முன்னாள் வாசகர்களும், காமிக்ஸ் ரசிகர்களும் அவரது சிரமத்தைப் போக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. இல்லையேல் தமிழில் ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று வந்துகொண்டிருக்கும் லயன், முத்து காமிக்ஸுகளுக்கும் விரைவில் மூடுவிழா வந்துவிடும் :(


மகிழ்ச்சியான பின்குறிப்பு : நான் எப்போதோ எழுதிய "காமிக்ஸ் ரசிகர்களுக்கு" பதிவில் இன்று காலை லயன் காமிக்ஸ் ஆசிரியர் எஸ்.விஜயன் பின்னூட்டமிட்டு என்னை கவுரவப்படுத்தியிருக்கிறார் :-)

லக்கிலூக் பதிவில் இருந்து மீள்பதிவாக்கப்பட்டது...மூலத்தை பார்க்க

காமிக்ஸ் ரசிகர்களுக்கு

நண்பர் இளவஞ்சி என்னுடைய பதிவொன்றில் தன்னுடைய காமிக்ஸ் ரசிப்புத் தன்மையை வெளிப்படுத்தியிருந்தார்....

நானும் ஒரு காமிக்ஸ் ரசிகன் என்ற முறையில் இது குறித்து ஒரு பதிவொன்று போடலாம் என்று முடிவு செய்தேன்....

தமிழில் காமிக்ஸ் என்பது 1960களில் வெளிவர ஆரம்பித்தது... எனக்குத் தெரிந்து "மாலை மதி" முதலில் காமிக்சாக 1960களின் மத்தியில் வந்தது.... அமெரிக்க மற்றும் ஐரோப்பிய காமிக்ஸ்களின் உரிமையை வாங்கி தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டார்கள்....

ஆனாலும் தமிழ் காமிக்ஸின் பொற்காலம் ஆரம்பமானது முத்து காமிக்ஸ் தோன்றிய பிறகே.... 1971ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முத்து காமிக்ஸின் முதல் கதை இரும்புக்கை மாயாவி.... 128 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தின் விலை அப்போதே 90 காசு.... முல்லை தங்கராசன் என்பவரை பொறுப்பாசிரியராக கொண்டு முத்து காமிக்ஸ் ராஜநடை போடத் தொடங்கியது....

பெரும் வரவேற்பின் காரணமாக முத்து காமிக்ஸ் 80களின் ஆரம்பத்தில் முத்து காமிக்ஸ் வாரமலர் (தினமலர் வாரமலருக்கே அது தான் முன்னோடி) என்ற ஒரு இதழைத் தொடங்கியது.... ஆனாலும் மாத இதழுக்கு கிடைத்த வரவேற்பு வார இதழுக்கு கிடைக்காததால் அது கொஞ்சம் ஆண்டுகளிலேயே நிறுத்தப் பட்டு விட்டது....

முத்து காமிக்ஸின் அபார வெற்றியைத் தொடர்ந்து அதே நிறுவனத்தார் 1984ஆம் ஆண்டு லயன் காமிக்ஸ் என்ற புதிய காமிக்ஸ் இதழையும் தொடங்கினார்கள்.... முத்து காமிக்ஸின் உரிமையாளர் தன் மகனுக்காக தொடங்கிய காமிக்ஸ் அது.... அவரது மகன் விஜயன் லயன் காமிக்ஸின் ஆசிரியராக பொறுப்பேற்ற போது அவரது வயது 17.

இதே ஆண்டில் பிரபல தினத்தந்தி குழுமமும் காமிக்சுகளுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து தானும் ராணி காமிக்ஸ் தொடங்கியது.... 1984 முதல் சுமார் பத்து ஆண்டுகளுக்கு காமிக்ஸ் விற்பனை தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தது.... குறிப்பாக Cowboy கதைகளை தமிழக குழந்தைகளும், இளைஞர்களும் பரவலாக ரசிக்க ஆரம்பித்தார்கள்....

லயன் காமிக்சும் தன் சாம்ராஜ்யத்தை ஜூனியர் லயன், மினி லயன், திகில் காமிக்ஸ் என்று புதுப் புது காமிக்ஸ்களைத் தொடங்கி விரிக்க ஆரம்பித்தது....

இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைப் பருவத்தில் இருந்த நானும் காமிக்ஸுகளுக்கு அடிமை ஆனேன்... அதுவும் லயன் காமிக்ஸ் தீபாவளி, கோடை விடுமுறை, பொங்கல் ஆகிய சமயங்களில் Digest போன்று ஸ்பெஷல் இதழ் வெளியிடுவார்கள்... அவற்றைப் படிக்க பெரும் ஆர்வம் காட்டுவேன்... 1987ஆம் ஆண்டு லயன் காமிக்ஸ் தீபாவளி மலராக வெளியிட்ட சூப்பர் ஸ்பெஷல் 10 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது.... சமீபத்தில் அந்த இதழ் ஒன்றினை ரூ. 500 பிரீமியம் செலுத்தி வாங்கினேன்....

என் காலக்கட்டத்தில் காமிக்ஸ் படித்த சிலர் இன்னமும் காமிக்ஸ் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் (நானும் தான்) .... நிறைய பேர் படித்த காமிக்ஸ்களை கலெக்டு செய்தும் வைத்திருக்கிறார்கள்.... நான் கிட்டத்தட்ட 85 சதம் லயன் காமிக்ஸ் வைத்திருக்கிறேன்....

1993-94களில் தனியார் தொலைக்காட்சிகள் வந்தபிறகு குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் காமிக்ஸ் மோகம் குறைய ஆரம்பித்தது.... ராணி காமிக்ஸ் தாக்குப் பிடிக்க முடியாமல் 500 இதழ்களோடு தன் கணக்கை முடித்துக் கொண்டது.... மினி லயன், ஜூனியர் லயன், திகில் இதழ்களும் ஊத்தி மூடிக்கொண்டன....

இப்போதும் மிஞ்சி நிற்பது முத்து மற்றும் லயன் காமிக்ஸ்கள் மட்டுமே.... இந்த கோடை விடுமுறைக்கு லயன் காமிக்ஸ் வெளியிட்டிருக்கும் இதழின் விலை என்ன தெரியுமா? ரூபாய். 100/-.... என்னைப் போன்ற ஒரு சிலர் அதையும் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறோம்....

யாராவது Ex-காமிக்ஸ் ரசிகர்கள் இருந்தால் சொல்லுங்கள்.... மீண்டும் நீங்கள் காமிக்ஸ் படிக்க நான் உதவுகிறேன்... காமிக்ஸ் படிப்பதால் ஒரு பெரிய நன்மை என்னவென்றால் நம் வயது 20 வருடம் குறைந்தது போல உணருகிறோம்....

அறிவியலால் கண்டுபிடிக்க முடியாத கால இயந்திரந்தின் பயனை காமிக்ஸ் படிப்பது மூலம் நாம் அடையலாம்.....

லக்கிலூக் பதிவில் இருந்து மீள்பதிவு

Tuesday, July 17, 2007

அறிமுக ஹாட்லைன்

தமிழ் காமிக்ஸ் உலகை பற்றி எழுதவேண்டும் என்று ஆரம்பிக்கப்படும் கூட்டு வலைப்பதிவு...!!!

இப்போதைக்கு இணைந்துள்ள நண்பர்கள் !!!

லக்கிலுக்
சிந்தாநதி
எஸ்.பாலபாரதி
செந்தழல் ரவி
Blog Widget by LinkWithin