Friday, May 23, 2008

லக்கிலுக்கின் தாயில்லாமல் டால்டன் இல்லை!!

முதலில் லயன் Jolly Special குறித்தும், Cowboy Special குறித்தும் எழுத வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். ஸ்பெஷல் இதழ் கையில் கிடைத்ததும் முதலில் தேடிப்போய் படித்தது டெக்ஸின் கதைகளைத் தான். ஒன்று மொக்கையோ மொக்கையாகப் போய் விட, அடுத்தது வடிவம் என்னும் வகையில் சிறப்பாகவே இருந்தது. ஆனால் கொஞ்சம் வளர்ந்து தொலைத்து விட்டதால் அதன் Plot ( செவ்விந்திய எழுச்சியை ஒடுக்குவது) நொருடலாக இருந்ததால் அந்த நெருடல் பற்றி ஒரு பதிவை எழுதினேன். அந்தப் பதிவில் இன்னும் கொஞ்சம் Tinkering வேலை பாக்கி இருக்கிறது. எனவே ஸ்பெஷல் இதழோடு வந்திருந்த லக்கிலுக்கின் "தாயில்லாமல் டால்டன் இல்லை" கதை பற்றி இந்த Stop Gap பதிவு.


முதலில் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும் - அதாவது நம்ம ஊர் வடிவேலு ஜோக்கை ரசிக்கும் எவரையும் டால்டன் ப்ரதர்ஸ் தமது கோமாளிக் கூத்துகளால் கட்டிப் போட்டு விடுவார்கள். சிரிப்புத் திருடர்கள் - நாம் சிரித்துக் கொண்டிருக்கும் போதே நம் இதயத்தைத் திருடி விடுவார்கள். எகிடு தகிடாக ஏதாவது செய்து திரும்பத் திரும்ப லக்கிலுக்கிடம் மாட்டிக் கொள்ளும் sweet rascals. இந்தக் கதையைப் பொருத்தளவில் லக்கிலூக்கை விட அதிகம் ஸ்கோர் செய்திருப்பது டால்டன்ஸ் தான். அதிலும் மா டால்டனின் "கொள்ளைகள்" உண்மையாகவே நம் இதயத்தைக் கொள்ளை கொள்ளும் ரகங்கள். இந்தக் கொள்ளையைத் தடுக்க லக்கிலுக்காலும் கூட முடியாது ;-)

கதை என்று பார்த்தால்... ஒரே ஒரு ஊரில் ஒரு கொக்காம், அதைப் பிடிக்க ஒருத்தன் நினைத்தானாம் - அவன் என்ன செய்தானாம்?? - அந்தக் கொக்கின் தலையில் வென்னெயை வைத்தானாம் - அட ! அப்புறம்? - அந்த வென்னை உருகி கொக்கின் கண்களை மறைத்த போது நடந்துபோய்ப் கொக்கைப் பிடித்தானாம் - இந்த ரகத்தைச் சேர்ந்த கதைதான். ஆனால் அது ஒரு மேட்டரே இல்லை என்னும் அளவிற்கு காமெடியான சம்பவங்களின் கோர்வையான கலக்கல் தான் தாயில்லாமல் டால்டன் இல்லை.

வழக்கம் போல் டால்டன்கள் சிறையில் வாட, அவர்களின் அம்மாவான மா டால்டன் வெளியே 'தவித்துக்' கொண்டிருக்கிறார். முறையாககாசு கொடுத்து கடைகளில் பொருட்கள் வாங்குவது என்பது டால்டன்களின் குலப்பெருமைக்கே பங்கமான விஷயம் என்பதால் அவர் தேவைப்படும்போதெல்லாம் பக்கத்திலிருக்கும் கடைகளுக்கு துப்பாக்கியோடு வந்து "கொள்ளையடிப்பது" வழக்கம். பார்ட்டி படு கெயவி என்பதால் கடைக்காரர்களும் இந்தக் "கொள்ளைக்கு" ஒத்துழைக்கிறார்கள். இந்நிலையில் மா டால்டன் தனது சீமந்த புத்திரர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் "ஜெயிலேர்ந்துதப்பிச்சுப் போறதாயிருந்தா ஜலதோஷம் பிடிச்சுக்காம பார்த்துக்கோங்க.." என்கிற அக்கறையான வரிகள் இருக்கிறது. இதைக் கண்டவுடன் ஜூனியர் டால்டன்களுக்கு தாய்ப் பாசம் பீறிட்டுக் கிளம்புகிறது.

அப்புறம் என்ன நடந்திருக்கும்? அஃதே! டால்டன்கள் தப்பிக்கிறார்கள். எப்படி? அங்கே தான் வருகிறது டால்டன்களின் வழமையான குயுக்தியானமூளை.
ஜெயிலையே தீயிட்டு எரித்து விடுவது என்கிற அட்டகாசமான ப்ளானை கும்பலின் 'தலை'யான ஜோ முன்வைக்கிறான். திட்டப்படி ஜெயில் எரிகிறது - அதே திட்டப்படி டால்டன்கள் தப்பிக்கிறார்கள். தப்பித்தவர்கள் தாயைத் தேடி நேராக ஊர் வந்து சேர்கிறார்கள். வழக்கம் போல இவர்களைக்கண்டுபிடித்து ஒப்படைக்கும் பணி நம் ஹீரோ லக்கியின் தலையில் விழுகிறது. கதையின் துவக்கத்திலேயே அந்த ஊர் சுரங்கத் தொழிலாளர்களின்சம்பளப்பண பெட்டகத்திற்கு காவலாக ( வழியில் நடந்த நாப்பத்தி மூணு கொள்ளை முயற்சியை முறியடித்து ) அதே ஊருக்கு வந்து சேர்ந்துஏற்கனவே அங்கே தான் டேரா போட்டுக் கொண்டு காத்திருக்கிறார்.

ஊருக்கு வந்து சேரும் டால்டன் ப்ரதர்ஸ் தாயின் routine வாழ்க்கையைக் காண்கிறார்கள்; அதிலிருந்து அவர்களுக்கு அருமையான திட்டம் ஒன்று தோன்றுகிறது. அதன்படி மா டால்டன் போல வேடம் போட்டுக் கொண்டு அவ்வூரின் கடைகண்ணிகளுக்குள் நுழைய வேண்டியது - அவர்களும் மா டால்டன் தானே என்று கேஷுவலாக இவர்களை எதிர் கொள்ளும் போது அதிரடியாக மிரட்டிக் கொள்ளையடிக்க வேண்டியது. அப்புறம் கேட்க வேண்டுமா - டால்டன் ப்ரதர்ஸின் கைவரியால் சுத்துப்பட்டு பதினெட்டுப் பட்டியும் அல்லோலகல்லோலப்படுகிறது. இதை எப்படி நம் ஹீரோ துப்புத்துலக்கி கண்டுபிடிக்கிறார்; டால்டன்கள் கைது செய்ப்பட்டார்களா இல்லையா? என்பதையெல்லாம் நீங்களே வெள்ளித்திரையில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் ( லயன்ஆபீஸுக்கு போன் போடுங்கப்பா இன்னும் ஸ்டாக் வைத்திருப்பார்கள்).

கதையில் இரண்டு கேரக்டர்கள் பற்றி சொல்லியேயாக வேண்டும் ஒன்று ரின்-டின்-கேன் அடுத்து one of the Dalton - ஆவரெல்.

ரிண்டின்கேன் பற்றிப் படிக்கும் போதெல்லாம் எங்கள் வீட்டு Rummyன் நினைவு தான் எனக்கு வரும். இருபதிநாலு நகங்கள் இருக்கும் நாய் ஆக்ரோஷமாய் இருக்கும் வீட்டுக்குள் தெரியாதவர்கள் வந்தால் விடாது என்று சொல்லித் தான் எங்கள் தாத்தா எங்கிருந்தோ அவனைக் கூட்டிவந்தார்கள். முதலில் அவனுக்கு இரண்டு வயதாகும் வரை அவன் வாய் திறந்து குலைக்கவேயில்லை. நாங்களெல்லாம் ஊமையோ என்று கூடநினைத்திருந்தோம். அப்புறம் கடும் புலனாய்விற்குப் பிறகு அவன் இரவு மொட்டை மாடியில் தனியே நின்று கொண்டு தன் வாய்க்குள்ளேயே குலைக்கிறான்என்பதை தாத்தா கண்டுபிடித்தார்( அது கூட பக்கத்து வீட்டு பிகரின் - பொமரேனியன் - கவனத்தைக் கவரவே) . சாது என்றால் அப்படியொரு சாது - வாய்க்குள் கையை விட்டால் கூடக் கடிக்காது. அக்கா பையன் தொண்டைக் குழி வரைக்குமே கூட கையை விட்டிருக்கிறான்.. ம்ம்ஹூம் அமைதியாக வாயைத் திறந்து காட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்குமேதவிர கடித்ததில்லை. கோலங்கள் சீரியலை அவன் மும்முரமாக பார்த்துக் கொண்டிருக்கும் போது சானல் மாற்றினால் மட்டும் முகத்தைச்சுழித்திருக்கிறான் - நான் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் இதைச் சொன்னபோது யாருமே நம்பவில்லை.

அவன் செய்யும் சேட்டைகளுக்கோ அளவே இருக்காது. வீட்டில் மொஸைக் தரையில் வழுக்கி விழுந்து விழுந்து தரையைப் பிராண்டிக் கொள்வதைபார்க்க வேண்டுமே.. ரிண்டின் செய்யும் குறும்புகள் அத்தனையும் எனக்கு rummyயைத் தான் நினைவூட்டும்.

சிறையில் இருந்து தப்பிக்கும் டால்டன்களோடு ஒட்டிக் கொள்கிறான் ரிண்டின். ஆங்.. அவன் ஜோவின் கையோடு பினைக்கப்பட்டிருக்கும்சங்கிலியின் மறுமுனையில் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கிறான். மா டால்டனின் செல்லக்குட்டியான ஸ்வீட்டி பூனையை அவன் துரத்த - அவன் சங்கிலியோடு இனைக்கப்பட்டிருக்கும் ஜோவும் கூடவே தரதரவென்று இழுத்துச் செல்லப்பட.. அதகளம் தான்.

ஒரு கட்டத்தில் ரிண்டின் லக்கிலுக்கின் கையில் சிக்கிக் கொள்கிறான். அதற்கு சற்றுமுன்னே அவனிடம் படுத்துக் கொள்ளச்சொல்லி மா டால்டன் உத்தரவு போட்டு விடுகிறாள். எந்தவொரு உத்தரவாயிருந்தாலும் அதைப் பிறப்பித்தவர்கள் வந்து சொல்லும் வரை அப்படியே பின்பற்றுவது தான்ரிண்டினின் வழக்கம். எனவே லக்கி போகுமிடமெல்லாம் குழந்தையை வாரியனைத்து தூக்கிச் செல்வதைப் போல் தூக்கிச் செல்ல வேண்டியதாகிறது.கடைசியில் டால்டன்களின் இருப்பிடம் குறித்தும் ரிண்டின் மூலம் தான் லக்கிக்குத் தெரிய வருகிறது - எனவே ரிண்டின் கேரக்டர் படு பயங்கரமானதொரு திருப்பத்தை ஏற்படுத்தும் கேரக்டராகவும் இருக்கிறது.

அடுத்து ஆவரெல் - "ஆமாம் சிறையைக் கொளுத்தி விட்டால் நம்மையெல்லாம் மீண்டும் பிடித்த பிறகு எங்கே அடைப்பார்களாம்?" என்று தனது entry வசனத்தில் கேட்டு ஜோவை காண்டேத்துவதில் ஆரம்பித்து, மா டால்டனைக் கவர பித்துக்குளித்தனமான காரியங்கள் செய்வது வரையில் நமக்குப் பல இடங்களில் வயிற்று வலி வரக் காரணகர்த்தாவாய் இருக்கிறான்.


மொத்தத்தில் - நல்லதொரு வடிவத்தில் - கலர் படங்களில் நம்மை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் வகையில் இருக்கிறது "தாயில்லாமல் டால்டன் இல்லை"

பி-கு 1 : கதையில் சொல்லப்பட்டிருப்பது போல் மா டால்டன் ஒன்றும் fraud lady இல்லை. அடிலைன் லீ யாங்கர் என்னும் நிஜப் பெயர் கொண்ட இவர் நிஜத்தில் தனது கணவரையும் புதல்வர்களையும் திருத்தப் படாத பாடெல்லாம் பட்டிருக்கிறார்.

பி-கு 2: லக்கிலுக் கதையைப் பற்றி சொல்ல வந்து அது டால்டன் புராணமாகப் போய் விட்டதால் நமது லக்கியார் கோபித்துக் கொள்ளலாகாது!!

Friday, May 2, 2008

லக்கிலுக் அனிமேஷன் படம் பார்க்கறீங்களா?



Online Videos by Veoh.com
Blog Widget by LinkWithin