Tuesday, October 9, 2007

மாயாவிகளின் உலகில்


உயிர்மை- செப் 2003 -
வார்த்தைகளும் படங்களும் -
டிராட்ஸ்கி மருது

கட்டுரைத் தொடரில் இருந்து சில பகுதிகள்.

*

1950 களின் மத்தியில் முதலாம் வகுப்பு படிக்கும் போதே இந்த நோய் என்னைப் பீடித்து விட்டது. இன்று வரை அது தீரவே தீரவில்லை என்பதுடன் அந்த நோய் தரும் மயக்கம் சுகமான அனுபவமாகவும் மாறி விட்டது.அம்மயக்கத்தினூடே என்னைப்போல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கொண்டவனை நீங்கள் காணவே முடியாது என்றுதான் கூறுவேன். உலகம் முழுவதிலும் என்னைப் போன்ற நோயாளிகளுக்கு கணக்கே இல்லை. அவர்களும் அவரவர் நாடுகளில் இன்றைய நவீன கலாச்சாரச் சூழலில் 'மிக ஆரோக்கியமானவர்களாக' இருந்து வருகிறார்கள். அத்தகைய சூழல் இங்கு இல்லாததால் அந்த ஆரோக்கியம் எனக்குக் கிட்டாமல் போய்விடக்கூடாது என்று அலைந்து திரிந்து அந்த மயக்கத்தில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன்.

மதுரையில் 1956-57 களில் மிகச்சிறிய வயதில் என் தந்தை என்னையும் என் சகோதரர்களையும் ரீகல் டாக்கீஸுக்கு அழைத்துச் செல்வார். அப்படிச் செல்லும்போது அவருடைய பால்யகால நண்பர் சுவாமிநாதன் டவுன் ஹால் சாலையில் நடத்திய 'பாரதி புத்தக நிலையத்தில்' சுமார் இரண்டு மணி நேரம் செலவிடுவோம். தியேட்டருக்குப் போகுமுன் புத்தகக் கடையிலிருந்த வெளிநாட்டு காமிக்ஸ்கள் அனைத்தையும் பார்த்துவிட வேண்டும் என்ற வேகத்தில் புரட்டிக் கொண்டிருப்பேன். இன்றுவரை அந்த உணர்ச்சி வேகம் அப்படியேதான் இருக்கிறது.மிகுந்த ஆசையுடன் பல புத்தகங்களை வாங்கினாலும் எல்லாப் புத்தகங்களையும் வாங்க முடியவில்லையே என்ற பெரும் ஏமாற்றத்துடன் தான் எப்போதும் திரும்புவேன்.
...
...
...
டார்ஜான் என்னைக் கொள்ளை கொண்ட பாத்திரம். டார்ஜானின் உடல் அமைப்பை வரைந்து பார்ப்பது ஒரு வளரும் ஓவியனுக்கு மிகச்சிறந்த பயிற்சியாகும். காமிக்ஸ் ஓவியர் ஹேகார்த் வரைந்த சிங்கத்தின் வாயைப் பிளக்கும் டார்ஜானை வரைந்து பார்த்துப் பெருமைப் பட்டுக் கொள்வேன்.

....
....
....
படங்களோடு தொடராக நடத்தப் படுகிற, சொல்லப் படுகிற காமிக்ஸ் புத்தகங்களைச் சிறுவயதில் பார்க்க ஆரம்பித்த நான் அனிமேஷன், கிராபிக் நாவல். இண்டர்நெட், செல்போன்வழி அனுப்பப் படும் அனிமேட்டட் பிக்சர் மெசேஜ், டிஜிட்டல் சினிமா, எல்சிடி ஹோர்டிங், என அதன் பல பரிணாமங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். படங்கள் மற்றும் காமிக்ஸ்களின் மொழிதான் இந்த நூற்றாண்டின் மொழியாக அறியப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சொல்ல முடியாதவற்றையெல்லாம் இந்த ஊடகத்தில் சுலபமாக சொல்லிவிட முடிகிறது. மற்ற நாடுகளை விட ஜப்பானியரும், பிரெஞ்சுக்காரர்களும் இவ்வடிவத்திற்கு அடிமையாகி விட்டார்கள். ஜப்பானில் மாதத்திற்கு நாற்பதுக்கும் மேற்பட்ட காமிக்ஸ் பத்திரிகைகள் ஒவ்வொன்றும் சுமார் 300 பக்கங்கள் கொண்டதாக வெளிவருகின்றன. காமிக்ஸ் ஓவியர்கள் சினிமா நட்சத்திரங்கள் போல அங்கு நட்சத்திர அந்தஸ்து பெற்றிருக்கிறார்கள். இந்தக் காட்சிக் கலாச்சாரத்தை நாம் வளர்த்தெடுக்காததால் தான் உலகமொழியாகிய சினிமா நம்நாட்டில் மட்டும் பேசிக் கொண்டே இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

*****************************

மருதுவின் இந்தக் கட்டுரையில் தமிழ்காமிக்ஸ்களைப் பற்றி நேரடியாகப் பேசாவிட்டாலும் காமிக்ஸ் ரசிகனின் உணர்வுகளைச் சொல்கிறார். மேலும் நம்நாட்டில் போதுமான அங்கீகாரம் காமிக்ஸ்களுக்கு கிடைக்காததையும் ஆதங்கத்தோடு பதிவு செய்திருக்கிறார்.

ஆனாலும் தமிழில் வாசிக்க ஆரம்பித்தவர்களில் இன்றைய 25 வயது முதல் சுமார் 50 வயதுக்குட்பட்ட தலைமுறையினர் தமிழ்காமிக்ஸ்களை வாசித்திருப்பார்கள். அதன் இன்பம் அறிந்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது. மருது போன்ற மூத்த தலைமுறையினர் நேரடியாக வெளிநாட்டு காமிக்ஸ்களை வாசித்து வளர்ந்தது போலவே இன்றைய இளைய தலைமுறையும் காமிக்ஸ் என்றால் ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களை மட்டுமே கண்டு வளர்வதை காண முடிகிறது. காமிக்ஸ் கதாபாத்திரங்களை தொலைக்காட்சித் திரையில் காட்டூன் சானல்களிலும் சினிமாத்திரையிலும் அசைபடமாகவே கண்டு விடுகிறார்கள். இன்னமும் நூலிழையில் உயிர்வாழும் முத்துகாமிக்ஸ் போன்ற தமிழ் காமிக்ஸ் இதழ்களை அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்ய நம்மாலான முயற்சியாக தமிழ் காமிக்ஸ் உலகம் போன்ற வலைப்பதிவுகளும் உதவட்டும்.

Friday, October 5, 2007

காமிக்ஸ் நினைவுகள்

சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், பேட்மேன் என இன்று புகழ்பெற்று விளங்கும் திரைநாயகர்களும் காமிக்ஸ் கதாநாயகர்கள் அல்லவா? கார்ட்டூன் சானல் போன்றவை காமிக்ஸை அசைபடமாக காட்டுகின்றன. ஆனாலும் அந்தக் காலத்தில் சின்னஞ்சிறிய கையடக்க காமிக் புத்தகம் படித்த ஆனந்தம் இதில் கிட்டுவதாக தோன்றவில்லை. இப்போதைய குழந்தைகளுக்கு வருங்காலத்திய நினைவுகளாக புத்தகங்களுக்கு பதிலாக தொலைக்காட்சி கதைகள் தான் இருக்கக் கூடும்.

இரும்புக் கை மாயாவி தான் நம்ம பேவரிட். அப்புறம் அந்த லாரன்ஸ் டேவிட்டும் பிடித்தமான நாயகர்கள். அதுக்கப்பறம் நிறைய காமிக்ஸ் கதாநாயகர்கள் வந்து போனாலும் பெரிய அளவில் கவரவில்லை. கதாநாயகர்களை விட காமிக்ஸ் படிப்பதே இன்பம் என்ற நிலையில் மாற்றமில்லை. எங்கே காமிக்ஸ் புத்தகம் கண்டாலும் படிக்காமல் விடுவதில்லை இன்று வரைக்கும்.

மற்ற காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்காமல் போன நிலையில் வாங்கிய ராணிகாமிக்ஸ் புத்தகங்கள் இன்னமும் பரணில் பழைய அட்டைப்பெட்டியில் கிடக்கின்றன. தூசிதட்டி எடுத்து அடுக்கும் போது இப்போதும் ஓரிரண்டை எடுத்து படித்து விட்டுத் தான் வைக்கமுடிகிறது.

காமிக்ஸ் புத்தகங்களின் முக்கிய விஷயமே அதிலுள்ள ஓவியங்கள் தான். இன்று சில நவீன வசதிகள் வந்து விட்டாலும் அச்சுக்கலையின் ஆரம்ப காலத்திலேயே காமிக்ஸ் புத்தகங்களுக்காக ஓவியங்கள் வரைந்து முகபாவனைகளில் கூட தனித்தன்மை காட்டிய அந்த ஓவியர்கள் மிகவும் பாராட்டுக் குரியவர்கள். இதைப்பற்றி ஓவியர் மருது கூட உயிர்மையில் ஒரு தொடர் எழுதி இருந்தார்.
Blog Widget by LinkWithin