Wednesday, April 14, 2010

சிறப்பு பதிவு: லக்கிலுக்கின் ”மேற்கே ஒரு மாமன்னர்!”

 

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு விடுமுறை தின நல்வாழ்த்துக்கள். வழமை போல சமீப காலங்களில் பதிவிட இயலவில்லை. மன்னிக்கவும். அதனால் இன்று (இன்று மட்டுமே) ஒரு மீள்பதிவு. ரசிகர்கள் மன்னிக்க வேண்டுகிறேன். இனிமேல் இதுபோல தொடராது.


லயன் காமிக்ஸின் 202வது இதழாக முழுவண்ணத்தில் வெளிவந்திருக்கும் லேட்டஸ்ட் காமிக்ஸ் “மேற்கே ஒரு மன்னர்”. நிழலைவிட வேகமாக துப்பாக்கியை கையாளும் திறமை கொண்டவரான லக்கிலுக் ஒரு கோமாளிக்கூட்டத்திடம் மாட்டி படும் அவதைகள் வழக்கம்போல பெட்டிக்கு பெட்டி நகைச்சுவையாக அமைந்திருக்கிறது.

”தனிமையே என் துணைவன்” என்ற பாடலை கதையின் இறுதிக் கட்டத்தில் பாடுவது தான் லக்கிலுக்கின் வழக்கம். மாறாக இந்த கதையில் பாடலை பாடியவாறே அறிமுகமாகிறார். முன்பெல்லாம் செயின் ஸ்மோக்கராக இருந்த லக்கிலுக் சில ஆண்டுகளாக தம் அடிப்பதை விட்டு விட்டதால் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைகிறது.

கிராஸ் சிட்டியின் செல்வந்தர் ஒருவர் கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டு தான் அமெரிக்காவின் மன்னர் என்று நினைத்துக் கொண்டு, அரண்மணை, இராணுவம், அமைச்சர்கள் இத்யாதிகளை தன் சொந்த செலவில் அமைத்து கும்மி அடித்துக் கொண்டிருக்கிறார். கிராஸ் சிட்டிக்கு வரும் லக்கிலுக் ஏதோ ஒரு அசந்தர்ப்பமான சூழ்நிலையில் அவருக்கு உதவிவிட உடனடியாக லக்கிலுக்கை தளபதி ஆக்கிவிடுகிறார்.

ஒரு மரியாதைக்காக அந்த மன்னரின் (?) அரண்மனைக்கு விசிட் அடிக்கும் லக்கிலுக்குக்கு அதிர்ச்சி. பைத்தியக்காரனாக இருந்தாலும் அந்த மன்னர் ஒரு இராணுவத்தையே நிஜமாக அமைத்திருப்பதை காணுகிறார். ஒரு பைத்தியக்காரன் கையில் அழிவு ஆயுதங்களோடு இராணுவம் இருப்பது ஆபத்தானது என்று ஊருக்குள் எச்சரிக்கிறார்.

யாரும் (ஷெரிப் உட்பட) லக்கிலுக்கின் எச்சரிக்கையை சீரியஸாக எடுக்கவில்லை. லக்கிலுக் பயந்தது போலவே ஒரு மொள்ளமாறி அந்த பைத்தியக்கார மன்னனுடன் சேர்ந்துவிட அவர்கள் வசம் இருக்கும் இராணுவம் கிராஸ் சிட்டியை கைப்பற்றி வங்கியை கொள்ளையடிக்கிறது. இந்த கூத்துகளுக்கெல்லாம் லக்கிலுக் எப்படி முடிவு கட்டுகிறார் என்பதை விலாநோக சிரிக்க வைத்து சொல்கிறார்கள்.

பத்து ரூபாய் விலையில் முழு வண்ணத்தில் வெளியாகியிருக்கும் “மேற்கே ஒரு மாமன்னர்” இப்போது கடைகளில் பரபரப்பாக விற்பனையாகிறது. இந்த இதழின் ஹாட்லைன் பகுதியில் லயன் காமிக்ஸ் ஆசிரியர் எஸ்.விஜயன் ஒரு விவகாரத்தை கோடிட்டுக் காட்டியிருக்கிறார். சினிமா படங்களுக்கு வீடியோ பைரசி வருவது போல இப்போது காமிக்ஸ்களும் சிடி வடிவில் திருடி விற்கப்படுகிறதாம். அது சம்பந்தமாக அவர் எழுதியிருப்பது கீழே!“இரத்தப் படலம்” - தொடரும் ஒரு சோக காவியத்தை யாரும் மறந்திருக்க முடியாது. கமல் நடித்த “வெற்றி விழா” படத்துக்கே அந்த காமிக்ஸ் தொடர் தான் இன்ஸ்பிரேஷன் என்பார்கள். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வந்து கொண்டிருக்கும் அத்தொடர் ஒரே புத்தகமாக (முழுமையான பதினெட்டு பாகங்களும் சேர்ந்து) ரூ. 200 விலையில் மிக விரைவில் வர இருக்கிறது. வில்லியம் வான்ஸ் என்ற ஓவியர் வரைந்த தத்ரூப சித்திரங்கள் இத்தொடரின் சிறப்பு. காமிக்ஸ் ரசிகர்களுக்கு செம ட்ரீட் இது. அதுகுறித்த விளம்பரங்கள் கீழே :
நண்பர் விஸ்வாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

Blog Widget by LinkWithin