தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.
நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கி இனிமேல் தொடர்ந்து காமிக்ஸ் பதிவுகளை இடுகிறேன் (செந்தழல் ரவி அண்ணே, ஓகேவா?). குறைந்தபட்சம் ஒவ்வொரு மாதமும் வெளியாகும் காமிக்ஸ் புத்தகங்களை அட்டவணைப்படுத்தவாவது இது உபயோகமாகும். அதைப்போலவே வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் இந்த பாதம் என்ன என்ன காமிக்ஸ் புத்தகங்கள் வெளியானது என்பதை தேடவும் இந்த பதிவுகள் பயன்படும்.
இதற்க்கு முன்பாக, மதுரையில் காமிக்ஸ் எங்கே கிடைக்கும் என்று பல நண்பர்கள் கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவியாக இந்த தகவல்:
1. சூர்யா புக் செண்டர்
எண் 157/A, அழகர் கோவில் தெரு, தல்லாகுளம் போஸ்ட்,
மதுரை 2.
கடையின் தொலைபேசி எண்: 2533 042.
கைபேசி எண்: 99769 25649
அத்யாவசிய தேவை என்றால் மட்டுமே இந்த எண்ணில் அழைக்கவும், இல்லையெனில் கடையின் தொலைபேசி எண்ணுக்கு அழைக்கவும்.
2. ஸ்ரீராம் நியூஸ் ஏஜென்சி,
78/47. நன்மை தருவார் கோவில் தெரு,
மதுரை 1.
அண்ணாமலை அவர்களின் கைபேசி: 99941 35847
சரி, இந்த மாதம் வெளியான காமிக்ஸ் புத்தகங்கள் என்னென்ன என்பதை பார்ப்போமா?
ஃபெப்ரவரி 2015: தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள்
1. இரத்தப்படலம் (பாகம் 22 & 23)
இரத்தப்படலம் தொடரின் மறு ஆரம்பமான இந்த தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது பாகங்கள் இந்த இதழில் உள்ளன. 104 பக்கம் கொண்ட முழு வண்ண இதழின் விலை ரூபாய் 120.
2. ஆதலினால் காதல் கொள்ளாதீர்
வாய்ன் ஷெல்டன் தொடரின் தனி கதைகளில் இதுவும் ஒன்று. ஆகையால் முந்தைய கதைகளை படிக்காமலேயே இது புரியும் (இருந்தாலும் புதிய வாசகர்களுக்காக கதாபாத்திர அறிமுகம் செய்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும்). 54 பக்க புத்தகத்தின் விலை ரூபாய் 60.
3. சைத்தான் விஞ்ஞானி (ஸ்பைடர் கதையின் முதல் மறுபதிப்பு)
தமிழ் காமிக்ஸ் உலகின் சூப்பர் ஸ்டார் ஸ்பைடர் கதைகளில் இதுவரை மறுபதிப்பு செய்யப்படாத கதைகளில் ஒன்றான சைத்தான் விஞ்ஞானி கதை இம்மாதம் மறுபதிப்பு செய்யப்பட்டு வந்துள்ளது. சென்ற மாதமே சென்னை புத்தக கண்காட்சியில் வெளியாகவேண்டிய இந்த இதழ், பைண்டிங் தாமதம் ஆனதால் இம்மாதம் வெளியாகி இருக்கிறது.
122 பக்கங்களை கொண்ட இந்த கருப்பு வெள்ளை இதழின் விலை ரூபாய் 50. இந்த இதழின் சைஸ் மேலே இருக்கும் இரண்டு இதழ்களை போல பெரியதாக இல்லாமல் கைக்கு அடக்கமாக, படிக்க ஏதுவாக உள்ளது. முன்பு பாக்கெட் சைசில் வந்த இந்த கதை இப்போது அதைவிட பெரிய அளவில் படிக்க நன்றாகவே இருக்கிறது.
இதைத்தவிர 2012 ஆண்டில் வெளியான இதழ்களின் மறுபதிப்பு வரிசையில் என் பெயர் லார்கோ மற்றும் டபுள் திரில் ஸ்பெஷலை தொடர்ந்து மூன்றாவதாக கேப்டன் டைகரின் தங்க கல்லறை இதழும் நூறு ரூபாய் விலையில் வெளியாகி இருக்கிறது.
1997ல் முதலில் கருப்பு வெள்ளையில் இரண்டு பாகங்களில் வெளியான இந்த இதழ் இப்போது முழு வண்ணத்தில் படிக்க அட்டகாசமாக இருக்கிறது. என்ன, கருப்பு வெள்ளை இதழின் மொழிபெயர்ப்பு கொஞ்சம் பட்டி, டிங்கரிங் செய்யப்பட்டு இருப்பது பழைய வாசகர்களுக்கு ஆங்காங்கே இடிக்கும்.
வழமை போல உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
நன்றி. வணக்கம்.