Wednesday, April 16, 2008

காமிக்ஸ்.. சில பழைய நினைவுகள்..!

நான் பொடியனாக இருந்த காலத்தில் செமக் குறும்புக்காரனாம். வீட்டில் அடங்கவே மாட்டேனாம். ஒரு கட்டத்தில் என்னை கட்டில் காலோடு சேர்த்துக் கட்டியெல்லாம் கூட வைத்திருந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் எதுவும் வேலையாகமல் போய் விட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் 'இவன் வீட்டோடு அடங்காத அடங்காப்பிடாரனாக ஆகிவிடுவானோ' என்று பயம் ஏற்பட்டிருக்க வேண்டும். என்னை ஒரு இடத்தில் கட்டி வைக்க என்ன செய்யலாம் என்று யோசித்த அப்பாவிற்கு அவரது நன்பர் கொடுத்த யோசனை தான் சித்திரக்கதைகளும் சிறுவர் இலக்கியமும். அது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்; ஒரு நாள் அப்பா வீட்டுக்கு வேலை முடிந்து திரும்பி வரும்போது ஒரு புத்தகம் வாங்கி வந்தார். தலைப்பு "பாலமித்ரா" என்று இருந்தது.


அன்று தொடங்கிய பந்தம் தான் அது. இதோ இப்போது இரத்தப்படலத்திற்கு முன்பதிவு செய்து கொரியர் அனுப்பி விட்டு மூன்றாவது முறையாக லயன் அலுவலகத்திற்கு போன் செய்து "கொரியர் வந்திச்சா சார்" என்று கேட்டு விட்டு - "என்ன எழவுடா கொரியர் சர்வீஸ் நடத்தறான்" என்று புலம்பிக்கொண்டிருக்கிறேன் :-)

பாலமித்ரா தான் நான் முதல் முதலாக வாசித்த சிறுவர் இலக்கியம். சிறுவர் இலக்கியம் என்கிற வார்த்தையே தவறோ என்று இப்போது படுகிறது - ஏனெனில் அதில் அன்று வந்த பல கருத்துகள் இப்போது வளர்ந்த குழந்தைகளுக்கும் கூட பொருந்தி வரக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது. பழைய பாலமித்ராவை இப்போது எடுத்து வாசித்தாலும் அந்த நடை அப்படியே கட்டிப்போடுவதாக இருக்கும். என்ன ஒன்று - கொஞ்சம் ஧மல்மருவத்தூர் மகிமை, சாய்பாபா மகிமை என்றெல்லாம் கடைசியாக வரும் சிறுகதையில் மொக்கை போட்டிருப்பார்கள். But its okay!! ;-)

புத்தகம் என்னை ஓரிடத்தில் அமர்த்தி வைப்பதை பார்த்த அப்பா, பின் அம்புலிமாமா இதழ்களும் வாங்கி வர ஆரம்பித்தார். புதிய இதழ்கள் தவிர பழைய புத்தகக் கடைக்குச் சென்று பழைய இதழ்களையும் அரை விலைக்கு வாங்கி வந்து கொடுப்பார். விக்ரமாதித்தன்-வேதாளம் கதைகளுக்கு அந்தக் காலத்தில் நான் வெறித்தனமான ரசிகன். புத்தகம் கைக்கு வந்ததும் வேறெந்தக் கதைகளையும் விட முதலில் தேடிப்பிடித்து வாசிப்பது விக்ரமாதித்தன் கதையைத் தான்.

இப்படியாக வாசிப்புப் பழக்கம் ஒட்டிக் கொண்ட பின், அதே அலைவரிசையில் இருந்த வேறு சிலரும் நன்பர்களானார்கள். பூபதி, சேகர், குணா, நித்யா குணாவின் அண்ணா என்று நாங்கள் ஒரு செட். எங்களுக்குள் புத்தகங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்வோம். அப்படி நடந்த எக்ஸ்சேஞ்சில் ஒரு நாள் கையில் கிடைத்தது தான் ராணி காமிக்ஸ். பொதுவாக அது வரைக்கும் நானே புத்தகம் வாங்க கடைகளுக்குப் போனதில்லை. அப்படி ஒரு தேவை ஏற்பட்டதும் இல்லை. அப்பா தான் வாங்கி வருவார் - அதிலும் காமிக்ஸ்களுக்கு Strict NO!!. Only அம்புலிமாமா/பாலமித்ரா.. எப்போதாவது மாயாஜாலக் கதைகள். எனவே காமிக்ஸ் என்கிற ஒரு வடிவம் இவ்வளவு சுவாரசியமான ஒன்று என்பதே எனக்கு ரொம்ப நாட்களாகத் தெரியாமலேயே இருந்திருக்கிறது. அப்படி ஏன் காமிக்ஸ்களை என்னிடம் இருந்து அப்பா மறைத்து வைத்தார் என்பதை நான் முதல் காமிக்ஸ் வாசித்த போதே புரிந்து கொண்டேன்.

குணாவின் அண்ணா பிரகாஷ் அப்போது பத்தாவது முடித்து ரிசல்ட்டுக்காக காத்துக் கொண்டிருந்தார். எங்களுக்கு அது எட்டாவது பெரிய பரிட்சை லீவு சமயம். அவரிடம் நான் கொஞ்சிக் கூத்தாடி வாங்கியது ஜேம்ஸ் பாண்ட் கதை. பெயர் நினைவில் இல்லை - கதை கூட நினைவில் இல்லை. ஆனால் அந்த படங்கள் நன்றாக நினைவில் இருக்கிறது. குறிப்பாக அந்த அழகிய வில்லிகளும் கதாநாயகிகளும். பாண்டின் துப்பாக்கி சாகசங்கள் ஈர்த்ததோ இல்லையோ அந்த வயதில் அவரின் கட்டில் சாகசங்கள் நிறையவே ஈர்த்தது. இது போன்ற விடயங்களில் Exposure கிடைத்தவுடன்எல்லா பையன்கள் போல நானும் ரகசியமானவனாகிப் போனேன். பால் வித்தியாசம் தெரியாமல் எதிர்வீட்டு நித்தியாவுடன் நான் விளையாடிய விளையாட்டுகள் சுத்தமாகக் குறைந்து விட்டது. சில நாட்களிலேயே எனது குரல் உடைந்து போனது. மிலிட்டரி தாத்தா ஒரு குறும்புச் சிரிப்புடன் சொன்னார் - "ம்ம்ம்... பேராண்டி வயசுக்கு வந்துட்டான்..."

எனது விடலை நாட்களின் முக்கியத்தருணங்கள் பலவற்றுக்கும் காமிக்ஸ் ஏதோவொரு வகையில் காரணமாக இருந்திருக்கிறது. ஒருவேளை நான்கௌபாய்களை இமிடேட் செய்ய முயன்று, ஒரு மார்க்கமாக விளக்கெண்ணை குடித்தவன் போலவே இறுக்கமாக அலைந்து திரிந்ததால் தான் எனக்குப் பெண் அதிகம் நன்பர்கள் இல்லாமலேயே ( மெய்யாலுமேங்க) போய் விட்டார்களோ என்று இப்போதும் மனதில் ஓரத்தில் ஒரு சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. எனக்கு "குரல் உடைய" காரணமாக இருந்ததோடு ஜேம்ஸின் அந்த அழகிய காதலிகள் ஜகா வாங்கிக் கொண்டு விட்டார்கள்..மற்றபடி எனது விடலை நாட்களின் கனவுகளில் நான் இடுப்பின் இரண்டுபுறமும் சொருகிய கைத்துப்பாக்கியோடும், கெண்டைக்காலில் முள் உருண்டை கொண்ட ஷூவும், ஒரு புறம் சாய்ந்த வட்டத் தொப்பியுமாகவே அலைந்து திரிந்து கொண்டிருந்தேன்.

இதோ நாலு கழுதை வயசாகிவிட்டாலும், லயனின் அட்டைப் படத்தில் டெக்ஸைப் பார்த்ததும் வாய் தானாகவே "வாவ்" என்கிறது.. "இருளின் மைந்தர்கள்" இதழை ஒரு முப்பது முறையாவது படித்திருப்பேன்.. பல பக்கங்கள் அக்கக்காக உதிரும் நிலைக்கு வந்து விட்டது; செல்லோ டேப் போட்டு கிட்டத்தட்ட லேமினேட் செய்தே வைத்திருக்கிறேன். உரிமையோடு எனது பர்ஸில் இருந்து பணம் எடுக்கும் எனது அக்கா கூட தப்பித் தவறி எனது காமிக்ஸ் கலெக்ஷனை மட்டும் தொடவே மாட்டாள். என்னளவில் அவையெல்லாம் பொக்கிஷங்கள்; அவைகளெல்லாம் கால இயந்திரங்கள்.என்னை எனது பழைய உலகத்துக்கு கடத்திச் செல்லும் கால இயந்திரங்கள்.. ஒவ்வொரு புத்தகத்தைத் தொடும் போதும் ஒரு சம்பவம் நினைவுக்கு வரும் - "இது குணா கொடுத்தது" "இது நித்யா கிட்டேயிருந்து சுட்டது" "ஹேய்..அவளுக்கு இரண்டாவதா பையன் பிறந்திருக்கானில்லே" "இது இரும்புக் கை மாயாவி புத்தகத்தை தொலைத்ததற்கு ஈடாக சேகரிடம் வாங்கியது"......

சரி சரி போதும் போதும்...

பழைய நினைவுகளில் உலாத்துவது என்னளவில் ஒரு சுகானுபாவமாகத் தான் இருக்கிறது.. ஆனாலும் இந்த பதிவைப் பொருத்தமட்டில் மேற்கொண்டு உங்களை நான் போரடிக்க விரும்பவில்லை. லயன் கௌபாய் ஸ்பெசலுக்காகவும், ஜாலி ஸ்பெசலுக்காகவும் வெயிட் பண்ணிகிட்டிருக்கேன் ( ஏரியா தபால்காரர் நொந்துட்டார் ). வந்ததும் அதைப் பற்றி எழுதி உங்களை மீண்டும் போரடிப்பேன்.

அது வரை...

bye bye Friends!!!

9 comments:

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

ஒருவேளை நான்கௌபாய்களை இமிடேட் செய்ய முயன்று, ஒரு மார்க்கமாக விளக்கெண்ணை குடித்தவன் போலவே இறுக்கமாக அலைந்து திரிந்ததால் தான் எனக்குப் பெண் அதிகம் நன்பர்கள் இல்லாமலேயே ( மெய்யாலுமேங்க) போய் விட்டார்களோ என்று இப்போதும் மனதில் ஓரத்தில் ஒரு சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.

ஆனா நான்கூட கௌபாய்மாதிரி நினைச்சுக்கொண்டு அந்த ஆக்ஷ்னுகள் விட்டுக்கொண்டு திரிந்தாலும் பெண்நண்பிகள் இருந்தாங்க. அவங்களும் காமிக்ஸ் ரசிகைகள் என்பது வேறுவிடயம்.

பாருங்க என்னோட பெயர்ல கௌபாய்னு சேர்த்ததே இந்த காமிக்ஸ் மேல கொண்ட பைத்தியம்தானுங்கோ. சின்ன வயசில் நான் நிறைய கனவுகாணுவேன். நான்தான் டெக்ஸ்வில்லர், காமிக்ஸ்ல இல்லாதமாதிரி கனவுல இந்த டெக்ஸூக்கு பறக்குற சக்தியெல்லாம் இருக்கும். இரண்டு மூனறு கதாபாத்திரங்களின் கலவைதான் வேறொன்றுமில்லை.

காமிக்ஸ் ரசிகர்கள் எல்லோருடைய அனுபவங்களும் கிட்டத்தட்ட ஒரேமாதிரிப்போலத்தான் இருக்கிறது. அந்தக் காலங்கள்போல இன்றில்லை.

அதுசரிங்க நாலு கழுதை வயசுன்னா எத்தனைங்க? எனக்கு எத்தனை கழுதை வயசுன்னு பார்ப்பம்.

அப்புறம் டெக்ஸின் "மண்ணின் மைந்தர்கள்" உங்க இடுகையில "மண்ணின் நமந்தர்கள்"ன்னு இருக்கு. மாத்தி விடுங்கோ.

லக்கிலுக் எனக்கும் இந்த வலைப்பதிவில எழுதணும்போல இருக்கு. என்னோட ஜிமெயிலையும் முடிஞ்சா சேர்த்துக்கோங்கப்பா. என்னோட ஜீமெயில் cowboymathu(at)gmail(dot)com.

கிஷோர் said...

உண்மை தான். மிகவும் அருமையான பதிவு. உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது.Unbreakable படம் பார்த்திருக்கிரீர்களா?

billyjohn said...

எழுத்துப் பிழையை திருத்தியாச்சு கௌபாய்மது.

//சின்ன வயசில் நான் நிறைய கனவுகாணுவேன். நான்தான் டெக்ஸ்வில்லர்,//

நீங்களுமா...???

நன்றி கிஷோர். அந்தப் படம் பார்க்கவில்லை.

லக்கிலுக் said...

வாசகர் ஹாட்லைன் படித்தது மாதிரி சுவாரஸ்யமாக இருக்கிறது பில்லி. கலக்கல்!

நீங்கள் லக்கி கதைகளில் வரும் பொடியன் பில்லியின் ரசிகரா?

billyjohn said...

லக்கி, இவர் கொஞ்சம் பழைய பில்லி - கௌபாய் . யோசித்துப் பாருங்கள் நினைவுக்கு வருவார்..

Anonymous said...

Chezhiyan K,
Chennai

Hi Friends,

That Rani Comics that you were referring is infact the first issue of rani comics.

007 Jame Bond is the Hero and the title is "Azaghiyai Thedi".

The Billy Cow Boy that john is referring is Sattaiyadi veerar billy who came regularly in Rani Comics. They were referred as 3 kUDHIRAI VEERARGAL & they featured in 5/6 rANI COMICS ISSUES.

Anonymous said...

அம்புலி மாமா, ( பாலமித்ராவுடன், அந்த காலத்தில் வந்த பிற குழந்தைகள் இதழ்கள்

கோகுலம்
ரத்னபாலா
பூந்தளிர் - மிக அருமையான இதழ்
பூந்தளிர் அமர்சித்திர கதைகள்
சந்தமாமா (ஆங்கிலம்)
கோகுலம் (ஆங்கிலம்)
மற்றும்
சிறுவர்மலர்


இதில் பூந்தளிரில் வந்த அனைத்துமே “க்ளாசிக்”. இன்று படித்தாலும் இன்று வரும் சில “பெரியவர்களுக்கான: இதழ்களை விட அதிகம் பொது அறிவை தருகின்றன. ஒவ்வொரு இதழிலும் ஒரு உலோகம், ஒரு கண்டுபிடிப்பு, ஒரு ஊர் பற்றிய கதை என்று முழுவதும் அறிவுப்பெட்டகமாகவே இருந்த புத்தகம் அது

போன வார பத்திரிகையில் என்ன படித்தோம் என்பது நினைவில் உள்ளதோ இல்லையோ ரத்னபாலாவில் வந்த ராக்கெட் ராஜகுமாரி தொடரும், சிறுவர்மலரில் வந்த உயிரைத்தேடி தொடரும் இன்று வரை ஞாபகம் இருக்கிறது.

பாலமித்ராவில் ராகவேந்திரர் பற்றி கூட தொடர் வந்ததாக ஞாபகம்.

காமிக்ஸ் என்று பார்த்தால் சிறுவர்மலரில் வந்த வாழ்க்கை வரலாறுகள் (லால்பகதூர் ஸாஸ்திரி பள்ளி செல்ல பரிசலுக்கு பணம் செலுத்த வழியின்றி நீந்தி செல்வது, அம்பேத்கார் இங்கிலாந்தில் உணவு அருந்த பணம் இல்லாததால் நூலகத்திலேயே பிஸ்கட் சாப்பிட்டது) மிக அருமையாக வரையப்பட்டு வந்தது. இன்று வரை அந்த படங்கள் மனதில் இருக்கின்றன

இதில் எத்தனை இதழ்கள் இப்பொழுது வருகிறது :(

+Ve அந்தோணி முத்து said...

ஓ...! நண்பரே!
என்னை மீண்டும் இளவயதுக்குக் கூட்டிச்சென்று விட்டீர்கள்.

4-ஆம் வகுப்பில் தினத்தந்தி, தினமலரில், சிந்துபாத், கோபன்... கதைகளைப் படிக்கத் துவங்கி...

ஐந்தாம் வகுப்பில் தமிழ்வாணனின் சங்கர்லால் துப்பறிவது வரை... போய்,

வீட்டில் பாடப்புத்தகம் படிக்காமல் கதைப்புத்தகம் படிக்கிறான் என்று அண்ணனிடம் அடி வாங்கி....

அந்த ஆண்டின் கோடை விடுமுறையில் எங்கள் கிணறு என் உடலை பலி கொண்ட பின்,

புத்தகங்களே என் உலகமாகிப் போனது.

என் கற்பனைகளில்...
நான் நன்றாக நடப்பேன்... இரும்புக்கை மாயாவியாக.


ஓ...! அது ஒரு தனி உலகம்.

இப்பவும்... பழைய காமிக்ஸ், அம்புலிமாமா, பாலமித்ரா, பொம்மைவீடு...
கிடைக்காதா என மனம் ஏங்குகிறது.
எப்போதேனும் கிடைத்தால் படித்து முடித்துத்தான் மறு வேலை.

அருமையான முயற்சிக்கு நன்றி நண்பரே!

என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பூங்கொத்தும் உங்களுக்கு.

+Ve அந்தோணி முத்து said...

//Chezhiyan K,
Chennai

Hi Friends,

That Rani Comics that you were referring is infact the first issue of rani comics.

007 Jame Bond is the Hero and the title is "Azaghiyai Thedi".

The Billy Cow Boy that john is referring is Sattaiyadi veerar billy who came regularly in Rani Comics. They were referred as 3 kUDHIRAI VEERARGAL & they featured in 5/6 rANI COMICS ISSUES.

//

ஆஹா! நண்பர் செழியன் சொன்னது முற்றும் உண்மை.

அனைத்தும் நான் படித்திருக்கிறேன்.

முதல் ராணி காமிக்ஸ் உட்பட.

Post a Comment

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!

Blog Widget by LinkWithin