Showing posts with label மீள்பதிவு. Show all posts
Showing posts with label மீள்பதிவு. Show all posts

Wednesday, April 14, 2010

சிறப்பு பதிவு: லக்கிலுக்கின் ”மேற்கே ஒரு மாமன்னர்!”

 

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு விடுமுறை தின நல்வாழ்த்துக்கள். வழமை போல சமீப காலங்களில் பதிவிட இயலவில்லை. மன்னிக்கவும். அதனால் இன்று (இன்று மட்டுமே) ஒரு மீள்பதிவு. ரசிகர்கள் மன்னிக்க வேண்டுகிறேன். இனிமேல் இதுபோல தொடராது.


லயன் காமிக்ஸின் 202வது இதழாக முழுவண்ணத்தில் வெளிவந்திருக்கும் லேட்டஸ்ட் காமிக்ஸ் “மேற்கே ஒரு மன்னர்”. நிழலைவிட வேகமாக துப்பாக்கியை கையாளும் திறமை கொண்டவரான லக்கிலுக் ஒரு கோமாளிக்கூட்டத்திடம் மாட்டி படும் அவதைகள் வழக்கம்போல பெட்டிக்கு பெட்டி நகைச்சுவையாக அமைந்திருக்கிறது.

”தனிமையே என் துணைவன்” என்ற பாடலை கதையின் இறுதிக் கட்டத்தில் பாடுவது தான் லக்கிலுக்கின் வழக்கம். மாறாக இந்த கதையில் பாடலை பாடியவாறே அறிமுகமாகிறார். முன்பெல்லாம் செயின் ஸ்மோக்கராக இருந்த லக்கிலுக் சில ஆண்டுகளாக தம் அடிப்பதை விட்டு விட்டதால் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைகிறது.

கிராஸ் சிட்டியின் செல்வந்தர் ஒருவர் கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டு தான் அமெரிக்காவின் மன்னர் என்று நினைத்துக் கொண்டு, அரண்மணை, இராணுவம், அமைச்சர்கள் இத்யாதிகளை தன் சொந்த செலவில் அமைத்து கும்மி அடித்துக் கொண்டிருக்கிறார். கிராஸ் சிட்டிக்கு வரும் லக்கிலுக் ஏதோ ஒரு அசந்தர்ப்பமான சூழ்நிலையில் அவருக்கு உதவிவிட உடனடியாக லக்கிலுக்கை தளபதி ஆக்கிவிடுகிறார்.

ஒரு மரியாதைக்காக அந்த மன்னரின் (?) அரண்மனைக்கு விசிட் அடிக்கும் லக்கிலுக்குக்கு அதிர்ச்சி. பைத்தியக்காரனாக இருந்தாலும் அந்த மன்னர் ஒரு இராணுவத்தையே நிஜமாக அமைத்திருப்பதை காணுகிறார். ஒரு பைத்தியக்காரன் கையில் அழிவு ஆயுதங்களோடு இராணுவம் இருப்பது ஆபத்தானது என்று ஊருக்குள் எச்சரிக்கிறார்.

யாரும் (ஷெரிப் உட்பட) லக்கிலுக்கின் எச்சரிக்கையை சீரியஸாக எடுக்கவில்லை. லக்கிலுக் பயந்தது போலவே ஒரு மொள்ளமாறி அந்த பைத்தியக்கார மன்னனுடன் சேர்ந்துவிட அவர்கள் வசம் இருக்கும் இராணுவம் கிராஸ் சிட்டியை கைப்பற்றி வங்கியை கொள்ளையடிக்கிறது. இந்த கூத்துகளுக்கெல்லாம் லக்கிலுக் எப்படி முடிவு கட்டுகிறார் என்பதை விலாநோக சிரிக்க வைத்து சொல்கிறார்கள்.

பத்து ரூபாய் விலையில் முழு வண்ணத்தில் வெளியாகியிருக்கும் “மேற்கே ஒரு மாமன்னர்” இப்போது கடைகளில் பரபரப்பாக விற்பனையாகிறது. இந்த இதழின் ஹாட்லைன் பகுதியில் லயன் காமிக்ஸ் ஆசிரியர் எஸ்.விஜயன் ஒரு விவகாரத்தை கோடிட்டுக் காட்டியிருக்கிறார். சினிமா படங்களுக்கு வீடியோ பைரசி வருவது போல இப்போது காமிக்ஸ்களும் சிடி வடிவில் திருடி விற்கப்படுகிறதாம். அது சம்பந்தமாக அவர் எழுதியிருப்பது கீழே!



“இரத்தப் படலம்” - தொடரும் ஒரு சோக காவியத்தை யாரும் மறந்திருக்க முடியாது. கமல் நடித்த “வெற்றி விழா” படத்துக்கே அந்த காமிக்ஸ் தொடர் தான் இன்ஸ்பிரேஷன் என்பார்கள். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வந்து கொண்டிருக்கும் அத்தொடர் ஒரே புத்தகமாக (முழுமையான பதினெட்டு பாகங்களும் சேர்ந்து) ரூ. 200 விலையில் மிக விரைவில் வர இருக்கிறது. வில்லியம் வான்ஸ் என்ற ஓவியர் வரைந்த தத்ரூப சித்திரங்கள் இத்தொடரின் சிறப்பு. காமிக்ஸ் ரசிகர்களுக்கு செம ட்ரீட் இது. அதுகுறித்த விளம்பரங்கள் கீழே :




நண்பர் விஸ்வாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

Tuesday, July 24, 2007

காமிக்ஸ் ரசிகர்களுக்கு

நண்பர் இளவஞ்சி என்னுடைய பதிவொன்றில் தன்னுடைய காமிக்ஸ் ரசிப்புத் தன்மையை வெளிப்படுத்தியிருந்தார்....

நானும் ஒரு காமிக்ஸ் ரசிகன் என்ற முறையில் இது குறித்து ஒரு பதிவொன்று போடலாம் என்று முடிவு செய்தேன்....

தமிழில் காமிக்ஸ் என்பது 1960களில் வெளிவர ஆரம்பித்தது... எனக்குத் தெரிந்து "மாலை மதி" முதலில் காமிக்சாக 1960களின் மத்தியில் வந்தது.... அமெரிக்க மற்றும் ஐரோப்பிய காமிக்ஸ்களின் உரிமையை வாங்கி தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டார்கள்....

ஆனாலும் தமிழ் காமிக்ஸின் பொற்காலம் ஆரம்பமானது முத்து காமிக்ஸ் தோன்றிய பிறகே.... 1971ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முத்து காமிக்ஸின் முதல் கதை இரும்புக்கை மாயாவி.... 128 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தின் விலை அப்போதே 90 காசு.... முல்லை தங்கராசன் என்பவரை பொறுப்பாசிரியராக கொண்டு முத்து காமிக்ஸ் ராஜநடை போடத் தொடங்கியது....

பெரும் வரவேற்பின் காரணமாக முத்து காமிக்ஸ் 80களின் ஆரம்பத்தில் முத்து காமிக்ஸ் வாரமலர் (தினமலர் வாரமலருக்கே அது தான் முன்னோடி) என்ற ஒரு இதழைத் தொடங்கியது.... ஆனாலும் மாத இதழுக்கு கிடைத்த வரவேற்பு வார இதழுக்கு கிடைக்காததால் அது கொஞ்சம் ஆண்டுகளிலேயே நிறுத்தப் பட்டு விட்டது....

முத்து காமிக்ஸின் அபார வெற்றியைத் தொடர்ந்து அதே நிறுவனத்தார் 1984ஆம் ஆண்டு லயன் காமிக்ஸ் என்ற புதிய காமிக்ஸ் இதழையும் தொடங்கினார்கள்.... முத்து காமிக்ஸின் உரிமையாளர் தன் மகனுக்காக தொடங்கிய காமிக்ஸ் அது.... அவரது மகன் விஜயன் லயன் காமிக்ஸின் ஆசிரியராக பொறுப்பேற்ற போது அவரது வயது 17.

இதே ஆண்டில் பிரபல தினத்தந்தி குழுமமும் காமிக்சுகளுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து தானும் ராணி காமிக்ஸ் தொடங்கியது.... 1984 முதல் சுமார் பத்து ஆண்டுகளுக்கு காமிக்ஸ் விற்பனை தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தது.... குறிப்பாக Cowboy கதைகளை தமிழக குழந்தைகளும், இளைஞர்களும் பரவலாக ரசிக்க ஆரம்பித்தார்கள்....

லயன் காமிக்சும் தன் சாம்ராஜ்யத்தை ஜூனியர் லயன், மினி லயன், திகில் காமிக்ஸ் என்று புதுப் புது காமிக்ஸ்களைத் தொடங்கி விரிக்க ஆரம்பித்தது....

இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைப் பருவத்தில் இருந்த நானும் காமிக்ஸுகளுக்கு அடிமை ஆனேன்... அதுவும் லயன் காமிக்ஸ் தீபாவளி, கோடை விடுமுறை, பொங்கல் ஆகிய சமயங்களில் Digest போன்று ஸ்பெஷல் இதழ் வெளியிடுவார்கள்... அவற்றைப் படிக்க பெரும் ஆர்வம் காட்டுவேன்... 1987ஆம் ஆண்டு லயன் காமிக்ஸ் தீபாவளி மலராக வெளியிட்ட சூப்பர் ஸ்பெஷல் 10 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது.... சமீபத்தில் அந்த இதழ் ஒன்றினை ரூ. 500 பிரீமியம் செலுத்தி வாங்கினேன்....

என் காலக்கட்டத்தில் காமிக்ஸ் படித்த சிலர் இன்னமும் காமிக்ஸ் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் (நானும் தான்) .... நிறைய பேர் படித்த காமிக்ஸ்களை கலெக்டு செய்தும் வைத்திருக்கிறார்கள்.... நான் கிட்டத்தட்ட 85 சதம் லயன் காமிக்ஸ் வைத்திருக்கிறேன்....

1993-94களில் தனியார் தொலைக்காட்சிகள் வந்தபிறகு குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் காமிக்ஸ் மோகம் குறைய ஆரம்பித்தது.... ராணி காமிக்ஸ் தாக்குப் பிடிக்க முடியாமல் 500 இதழ்களோடு தன் கணக்கை முடித்துக் கொண்டது.... மினி லயன், ஜூனியர் லயன், திகில் இதழ்களும் ஊத்தி மூடிக்கொண்டன....

இப்போதும் மிஞ்சி நிற்பது முத்து மற்றும் லயன் காமிக்ஸ்கள் மட்டுமே.... இந்த கோடை விடுமுறைக்கு லயன் காமிக்ஸ் வெளியிட்டிருக்கும் இதழின் விலை என்ன தெரியுமா? ரூபாய். 100/-.... என்னைப் போன்ற ஒரு சிலர் அதையும் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறோம்....

யாராவது Ex-காமிக்ஸ் ரசிகர்கள் இருந்தால் சொல்லுங்கள்.... மீண்டும் நீங்கள் காமிக்ஸ் படிக்க நான் உதவுகிறேன்... காமிக்ஸ் படிப்பதால் ஒரு பெரிய நன்மை என்னவென்றால் நம் வயது 20 வருடம் குறைந்தது போல உணருகிறோம்....

அறிவியலால் கண்டுபிடிக்க முடியாத கால இயந்திரந்தின் பயனை காமிக்ஸ் படிப்பது மூலம் நாம் அடையலாம்.....

லக்கிலூக் பதிவில் இருந்து மீள்பதிவு
Blog Widget by LinkWithin