Thursday, April 17, 2008

லக்கிலுக் - சில குறிப்புகள்!


* பெல்ஜியத்தில் வாழ்ந்த ஓவியரான மோரிஸ் என்பவரின் சிந்தனையில் உதித்த கார்ட்டூன் கவுபாய் பாத்திரம் தான் லக்கிலுக். 1946ல் அவர் முதன்முதலாக லக்கிலுக்கை வரையத் தொடங்கினார். 2001ல் அவர் மறையும் வரை கசாப்புகடைக்காரன் ஆடுகளை போட்டுத் தள்ளுவதை போல தொடர்ந்து வரைந்து தள்ளிக் கொண்டே இருந்தார். மொத்தமாக எழுபத்தி இரண்டு லக்கிலுக் காமிக்ஸ்கள் உருவாக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.


* 1850களுக்கு பிறகு அமெரிக்காவில் வாழ்ந்த மாவீரனாக லக்கிலுக் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கும். லக்கிலுக் தன் நிழலை விட வேகமாக இயங்கக் கூடியவர். அவர் துப்பாக்கியை இயக்கி முடித்த பின்னர் தான் அவரது நிழல் துப்பாக்கி உறையிலேயே கையை வைக்கும்.

* நீதிக்கும், நேர்மை பரிபாலனத்துக்கும் தன் உயிரைக்கூட பணயம் வைப்பார் லக்கி.

* மொள்ளமாறிகள், முடிச்சவிக்கிகள், கேப்மாரிகள் மற்றும் சொறிநாய்களுக்கு என்றுமே லக்கி சிம்மசொப்பனம் தான்.

* லக்கியின் ஒவ்வொரு கதை இறுதியில் “தனிமையே என் துணைவன், தனிமையே என் வாழ்க்கை” என்று பாடியவாறே செல்வார்.


* லக்கி ஆரம்பக்கட்டத்தில் செயின் ஸ்மோக்கராக இருந்தார். எப்போதும் புகைவழியும் வாய் அவருடையது. 1983க்கு பின்னர் அவர் தம் அடிப்பதை நிறுத்தினார். தம்முக்கு பதிலாக ஏதோ ஒரு குச்சியை வாயில் சும்மானாச்சுக்கும் வைத்திருப்பார். லக்கிலுக் கதைகளில் சிகரெட் தடை செய்யப்பட்டதற்காக உலக சுகாதார நிறுவனம் அதன் படைப்பாளிகளை கவுரவித்தது.

* லக்கிலுக் கதைகள் அனைத்துமே இரட்டை கதாநாயகர்களை கொண்டது. ஒரு கதாநாயகன் லக்கிலுக், இன்னொரு கதாநாயகன் ஜாலி ஜம்பர். லக்கிலுக்கின் குதிரை. லக்கியை விட அவரது குதிரை புத்திசாலி.

* ரின் டின் என்ற ஒரு லூசுநாய் லக்கிலுக்கின் அனேக கதைகளில் வந்து அவரை வெறுப்பேற்றும்.

* அமெரிக்க வரலாற்றில் நிஜமாகவே வாழ்ந்த பல கதாபாத்திரங்கள் லக்கிலுக்கின் கதைகளில் இடம்பெறும். அடிதடி ஜேன், பொடியன் பில்லி, ஜட்ஜ் ராய் பீன், முடிச்சவிக்கி ஜெஸ்ஸி ஜேம்ஸ், மொள்ளமாறி கூட்டமான டால்டன் சகோதரர்கள் ஆகியோரை லக்கிலுக் கதைகளில் காணலாம்.

டால்டன் சகோதர்கள்

பொடியன் பில்லி

அடிதடி ஜேன்

ஜட்ஜ் ராய்பீன்

ஜெஸ்ஸி ஜேம்ஸ்

* குறிப்பாக டால்டன் சகோதரர்கள் லக்கிலுக்குக்கு நன்றாக தண்ணி காட்டுவார்கள். அந்த டால்டன் சகோதர்களுக்கே லூசு நாய் ரின் டின் அட்டகாசமாக தண்ணி காட்டும்.

* அந்த காலத்தில் அமெரிக்காவில் புகழ்பெற்ற கோச்சு வண்டி கம்பெனியான வெல்ஸ் பார்கோ, உலகின் முதல் கூரியர் சர்வீஸ் நிறுவனமான போனி எக்ஸ்பிரஸ் போன்ற நிறுவனங்களை லக்கிலுக்கின் சாகசங்களில் காணமுடியும்.

* மற்ற கவுபாய் கதைகளை ஒப்பிடும்போது லக்கிலுக் கதைகளில் செவ்விந்தியர்கள் வருவது மிகக்குறைவே.

* லக்கிலுக் கதைகள் நான்கு திரைப்படங்களாக இதுவரை வந்திருக்கிறது. டிவி தொடராகவும், வீடியோ விளையாட்டுகளாகவும் கூட லக்கிலுக் தரிசனம் தந்திருக்கிறார்.

* லக்கிலுக் கதைகளை வாசித்தால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் அமெரிக்கா குறித்த வரலாற்று அறிவைப் பெறமுடியும். அன்றைய அமெரிக்காவில் நடந்த பல சம்பவங்கள் லக்கிலுக் கதைகளில் காட்சியாக விரியும்.

* சில லக்கிலுக் கதைகளின் அட்டைப்படங்கள் :
















7 comments:

Anonymous said...

COMICS பற்றிய ஒரு BLOGஇல் தொடர்ந்து பதிவுகள் வருவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு இருகும் அனைவருமே 30 வயதுக்கு மேற்பட்டவர்களென என்னுகிரேன். அவர்களெலாம் தங்களுடைய குழந்தைகளுக்கு படிக்கும் வழக்கத்தை வளர்த்து விட்டால் COMICSஉம் வளரும், நமது குழந்தைகளின் அறிவும் வளரும். - SSK

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

வயதுகள் 30களுக்கு மேல் எனினும் காமிக்ஸினைப் பற்றிக் கதைக்கும்போது நாங்கள் சிறுவர்கள்தான்.

தமிழில் காமிக்ஸ்கள் வருவது முன்னைய நாட்களைப்போலல்லாது இப்போது குறைந்து விட்டது.

இந்த வலைப்பதிவு காமிக்ஸ் வாசிப்புப் பழக்கத்தை சிறிதாவது மீண்டும் ஏற்படுத்தும் என நம்புகிறோம்.

நல்லவொரு இடுகை. நாங்கள் சிறுவயதில் அடிக்கடி பாவிக்கும் வார்த்தைகளாக சோதா, சோமாறி, மொள்ளமாறி மற்றும் பனாதைப் பயல் என்பன இருக்கும். அனைத்துமே லக்கிலுக்கிற்குச் சொந்தமானவைதான்.

billyjohn said...

டால்டன் சகோதரர்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது எல்லோருக்கும் அண்ணனாக வரும் கேரக்டர் தான் ( குள்ளமாக இருப்பாரே )

டால்டன் நகரம் கதையில் இந்த சகோதரர்கள் கைவிடப்பட்ட அந்த நகரத்தைக் கைப்பற்றும் முன் சிறையில் இருந்து தப்பிக்க செய்யும் முயற்சிகளெல்லாம் படிக்கப் படிக்க சிரிப்பு பிச்சுக்கிட்டு வரும்... ஒரு முயற்சியில் தப்பிக்கத் தோண்டிய சுரங்கம் நேராக ஜெயிலர் அறையில் வந்து முடியும்..

அப்புறம் ஜாலி ஜம்பர்.. நம்ம தலைவர் கேஸினோவுக்குள் புகுந்த உடன் எப்படியும் ஜன்னல் வழியே தான் வருவார் என்பதை புரிந்து கொண்டு சரியாக ஜன்னல் கீழே நிற்கும் அளவுக்கு புத்திசாலி :))))))

அதிலும் ஒரு கதையில் கேஸினோவுக்கு இரண்டு ஜன்னல் இருக்க; ஜாலி இன்னொரு குதிரையை உசார்படுத்தி மற்ற ஜன்னலுக்கு நிறுத்தி வைத்திருக்கும்..

நல்லா எழுதியிருக்கீங்க எங்காளு இரவுக்கழுகார் பத்தி கூட இதே மாதிரி பாயிண்ட்ஸ் பாயிண்ட்ஸா எழுதலாம்..

சாலிசம்பர் said...

விதவிதமா அட்டைப்படங்கள பாத்து ஒரே ஏக்கமா போச்சு.இதெல்லாம் சென்னையில கிடைக்குதா பாஸ்?

Anonymous said...

மீண்டும் சின்ன வயதை ஞாபகப் படுத்தி விட்டீர்கள்

அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/

ARV Loshan said...

super..

முழுமையான ஒரு தகவல் திரட்டு!வழமை போல கலக்கி விட்டீர்கள் லக்கியாரே..

butterfly Surya said...

கலக்கலான பதிவு. அருமை.
அப்பாவிடம் அடம் பிடித்து வாங்கி படித்த முத்து, லயன், ராணி காமிக்ஸ் புத்தகங்கள்.

இன்று வலிய வாங்கி தந்தாலும் ஆர்வமுடன் படிக்க மனமின்றி POGO, Jetix தான் பார்ப்பேன் போடா, என்று மறுக்கும் குழந்தைகளை எண்ணி பார்க்கிறேன்.

இது வளர்ச்சியா..?? வீழ்ச்சியா..??

பழைய நினைவுகளுடன் மீண்டும் நான்... அற்புதம்.

Post a Comment

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!

Blog Widget by LinkWithin